Woman Health Tips: வெப்பத்தால் அதிகரிக்கும் உடல்நல பிரச்சினைகள்.. பெண்களே உஷார்!
Extreme heat Warnings: பெண்களில் 70 சதவிகித பேர், உச்ச வெப்ப மாதங்களில் சோர்வு, தலைச்சுற்றல், நீரிழப்பு மற்றும் இரைப்பை குடல் அசௌகரியம் போன்ற கடுமையான பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பெண்களுக்கு கடுமையான வெப்பம் ஒரு பொது சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்து வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நம்முடைய நாடு இந்தியா ஒவ்வொரு ஆண்டும் பருவகாலத்தை சரியாக எதிர்கொண்டு வருகிறது. இளவேனில்காலம் (வசந்த காலம்), முதுவேனில்காலம் (கோடை), கார்காலம் (மழை), குளிர்காலம், முன்பனிக்காலம் (அதீத பனிப்பொழிவு) மற்றும் பின்பனிக்காலம் (அதிகாலை பனிப்பொழிவு) என பிரிக்கப்பட்டுள்ளது. எனினும் இது இந்தியாவின் மாநில நிலப்பரப்பை பொறுத்து கால, நேரம் வேறுபடலாம்.
இப்படியான நிலையில் சென்னையில் செயல்பட்டு எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய வட மாநிலங்களிலும் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பாக நடந்த இந்த ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சுற்றுச்சூழல் பாதிப்பு பொதுமக்களுக்கு கவலை ஏற்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், இதனால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெண்கள் நெருக்கடிக்குள்ளாகிறார்கள் என தெரிய வந்துள்ளது.
குறிப்பாக கிராமப்புற மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் இந்த தாக்கத்தை அதிகமாக அனுபவிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை அதிக வெப்ப பாதிப்பு குறியீட்டு மாவட்டங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பெண்களில் 70 சதவிகித பேர், உச்ச வெப்ப மாதங்களில் சோர்வு, தலைச்சுற்றல், நீரிழப்பு மற்றும் இரைப்பை குடல் அசௌகரியம் போன்ற கடுமையான பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதில் பொருளாதாரத்தால் நலிவடைந்த பின்னணி கொண்டவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், கிராமத்தில் வாழ்பவர்கள், முறைசாரா வாழ்வாதாரங்களில் ஈடுபடுபவர்கள் ஆகிய வகைகளில் வரும் பெண்கள் இனப்பெருக்க சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஊதிய இழப்புகள்,மாதவிடாய் பிரச்னை, சிறுநீர் தொற்று, மன உளைச்சல், பணியிடத் துன்புறுத்தல், வீட்டு பிரச்னை, சுகாதாரப் பராமரிப்புக்கான தடைகள் போன்றவையும் கடுமையாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதிக வெப்பம் பதிவாகும் மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவுகள் 53% இருப்பதாகவும், வெப்பம் குறைந்த மாவட்டங்களில் இது 15% மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கோடை காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சல் கணக்கில் அடங்காதது என கூறப்பட்டுள்ளது. இதனால் எரிச்சல்,தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பாதிப்புகளை உணருவதாக பதிவு செய்துள்ளனர்.
இது நீண்டகால வெப்ப வெளிப்பாட்டின் உளவியல் சுமையை ஒட்டுமொத்தமாக எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த விஷயத்தில் நகர்ப்புறங்களி பணிபுரியும் பெண்கள் மீண்டும் மீண்டும் தொற்றுகளுக்கு ஆளாகிறார்கள்.
இதற்கு கழிப்பறைகள், நிழல், ஓய்வு இடைவேளை அல்லது சுத்தமான குடிநீர் இல்லாதது அடிப்படை காரணமாக பார்க்கப்படுகிறது. நீண்ட நேர வீட்டு வேலை, நெரிசலான வீடுகளில் காற்றோட்டம் இல்லாமையும் காரணிகளாக தொகுக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், பெண்களுக்குரிய நேரம் ஒதுக்கப்படுதல், கட்டாய ஓய்வு ஆகியவை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















