ராமசாமி முதல் ராமானுஜன் வரை.. உலகம் போற்றும் தமிழர்கள்!
கலை, இலக்கியம், அரசியல், அறிவியல், இசை என பலவற்றின் வாயிலாக தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்த்த திருவள்ளுவர், பெரியார், ராஜாஜி, ராமானுஜன், அப்துல் கலாம், இளையராஜா பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி கருதப்படுகிறது. செம்மொழியான தமிழ் மொழி 2,800 முதல் 7,000 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம் என ஆய்வறிஞர்கன் குறிப்பிடுகின்றனர். கலை, இலக்கியம், அறிவியல், கட்டிடக்கலை என பல துறைகளில் தமிழர்கள் தலைசிறந்து விளங்கியதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன.
பண்டைய காலம் தொடங்கி இன்று வரை, பல துறைகளில் தமிழர்கள் கோலோச்சி வருகின்றனர். அப்படி, உலகையே வியக்க செய்த தமிழர்கள் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
திருவள்ளுவர்:
வாழ்க்கையின் அனைத்து அறநெறிகளையும் 1333 திருக்குறள்கள் மூலம் உலகுக்கு எடுத்துரைத்தவர் திருவள்ளுவர். திருக்குறளின் முக்கியத்துவத்தை உலகின் தலைசிறந்த தத்துவவாதிகள், எழுத்தாளர்கள், தலைவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
ரஷிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், அண்ணல் காந்தியடிகள், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பல்துறை வித்தகர் ஆல்பர்ட் ஸ்விட்சர் உள்ளிட்டோர் திருக்குறளை பல உரைகளில் மேற்கோள் காட்டியுள்ளனர். திருக்குறளை படிப்பதற்காக காந்தி தமிழை கற்றார் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதுண்டு. அந்த அளவுக்கு திருவள்ளுவரின் புகழை சொல்லி கொண்டே போகலாம்.
பெரியார்:
பெரியாரின் மறைவுக்கு முன், பின் என நவீனத் தமிழ்நாட்டின் வரலாற்றை வரையறுக்கும் அளவுக்கு அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது அதற்கு பின்பும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்றவர். அந்த வகையில், நவீனத் தமிழ்நாட்டின் வரலாற்றைத் தீர்மானித்தவர்களில் முதன்மையானவர் பெரியார்.
தமிழர்களின் சுயமரியாதையை தட்டி எழுப்பி, சாதி-மத மூடநம்பிக்கைகளைக் களைந்தெறிந்து தமிழ் சமூகத்தை முற்போக்கு சமூகமாக மாற்றியதில் அவரது பங்கு அளப்பரியது. தமிழ்நாட்டின் கடந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றை திசைதிருப்பிய திராவிட அரசியலுக்கு விதை போட்டவர் பெரியார் என சொன்னால் அது மிகையாகாது.
ராஜாஜி:
கவர்னர் ஜெனரல், முதலமைச்சர், கவர்னர், உள்துறை அமைச்சர் என்று எண்ணற்ற பதவிகளை வகித்தவர் ராஜாஜி என்ற ராஜகோபாலாச்சாரியார். கடந்த 1878 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் தொரப்பள்ளி என்கிற கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா, தாயார் சிங்காரம்மா.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து ரவுலட் சட்டத்திற்கு எதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் உள்ளிட்ட சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டார். தனது வழக்கறிஞர் தொழிலை கைவிட்டு, 1930 ஆம் ஆண்டு காந்தி தலைமையில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக சிறை சென்றார். இவர் காந்தியின் மிகச் சிறந்த பக்தர்.
ராமானுஜன்:
லட்சம், கோடி எண்களைக்கூட எளிதில் கூட்டிக்கழித்துவிடும் கணித மேதை சீனிவாச ராமானுஜன். கணிதத்தின் மீது கொண்ட தீராத காதலால் கணித துறையில் பல சாதனைகளைச் செய்தவர். வறுமை இவரை ஆட்கொண்ட போதும் கணிதத்தை இவர் கைவிடவில்லை.
பள்ளிக்குச் செல்லாமல், கோயில் மண்டபங்களில் அமர்ந்து விடைதெரியா பல கணக்குகளுக்கு விடை கண்டுபிடிப்பதையே தன் முழுநேர வழக்கமாக வைத்திருந்தார் ராமனுஜன். ராமானுஜரின் கணக்கு சூத்திரங்கள் மற்றும் குறிப்புகளைப் பார்த்து பல்கலைக்கழக வல்லுனர்கள் வியந்தனர்.
அப்துல் கலாம்:
இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக இன்று வரை திகழும் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். ராமேஸ்வரத்தில் அக்டோபர்,15,1931 ஆம் ஆண்டு பிறந்த அப்துல் கலாம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தில் இருந்து கடின உழைப்பாலும், கல்வியாலும் தன் கனவுகளை நிஜமாக்கியவர்.
ராமேஸ்வரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தனது தொடக்க கல்வியை தொடங்கியவர் குடும்பத்தின் பொருளாதார சூழல் உணர்ந்து பேப்பர் போடுவது உள்ளிட்ட பல வேலைகள் செய்து பள்ளிப் படிப்பை தொடர்ந்துள்ளார். தென்கோடியில் உள்ள ஒரு ஊரில் பிறந்தவர் வடக்கே புதுடெல்லியில் அதிகாரத்தின் வாசல் வரை கொண்டு சேர்த்தது அவரின் உழைப்பும் முயற்சிகளும்.
இளையராஜா:
இணையற்ற இசை மேதைகளில் ஒருவர் இசைஞானி இளையராஜா. திரைப்படங்களின் காட்சிகளின் வசனங்களைத் தன் பின்னணி இசை மூலம் பேச வைத்தவர். தென்கோடி கிராமத்தில் பிறந்து தேம்ஸ் நதி நகரை இந்தியாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
கர்நாடக இசையையும் மேற்கத்திய இசையையும் தனது பாடல்களில் இழையோட வைத்து தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திரையிசைப் பாடல்களை உருவாக்கியவர். திரையிசைப் பாடல்கள் என்று பார்க்காமல் இந்தப் பாடல்களில் இளையராஜா இசையில் நிகழ்த்தியிருக்கும் பாய்ச்சல்கள் இன்னும் பல தலைமுறைகளுக்கு பாடமாக இருக்கப் போகின்றன.