Lok Sabha 2024: வேட்பாளர்கள் மீதுள்ள குற்ற வழக்குகளை தொலைக்காட்சியில் 3 முறை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் உத்தரவு
Lok sabha Election 2024: வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் இருந்தால் அதை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையமானது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குட்பட்டு, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.
குற்ற வழக்குகளை தெரிவிக்க வேண்டும்:
வேட்பாளர்கள் தங்களது குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் உரிய படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள் மேற்படி வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் மற்றும் தங்களது அரசியல் கட்சியின் வலைதளங்களிலும் உரிய படிவங்களில் விளம்பரம் செய்தல் வேண்டும். மேற்படி விளம்பரங்கள் வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி தினத்திற்கு மறுநாள் முதல் வாக்குப்பதிவு முடிவுறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை மூன்று முறை வெவ்வேறு நாட்களில் வெளியிடப்பட வேண்டும்.
இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பின்வரும் படிவங்களை வரையறுத்துள்ளது.
(i) படிவம் C-1 செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வேட்பாளர்கள் வெளியீடு செய்ய.
(ii) படிவம் C-2 செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் அரசியல் கட்சி வெளியீடு செய்ய
(iii) படிவம் C-3 தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலக பயன்பாட்டிற்காக.
(iv) படிவம் C-4 குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியீடு செய்தது தொடர்பாக வேட்பாளரின் அறிக்கை.
(v) படிவம் C-5 குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியீடு செய்தது தொடர்பாக அரசியல் கட்சியின் அறிக்கை.
(vi) படிவம் C-6 தலைமை தேர்தல் அதிகாரியின் பயன்பாட்டிற்காக. அலுலவக
(vii) படிவம் C-7 குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் மற்றும் கட்சியின் வலைதளங்களில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அல்லது வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் நாளில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பாக, இவற்றில் எது முந்தையதோ, அதன்படி அறிக்கை அளிக்க வேண்டும்.
மேற்காணும் பொருள் தொடர்பான இந்திய தேர்தல் ஆணையத்தின் முழுமையான அறிவுரைகள் மற்றும் பதிப்புகள் வாரியான தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள், தொலைக்காட்சி அலைவரிசைகளின் பட்டியலை www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை வெளியிட்டார்.
Also Read: Breaking News LIVE: பாஜக அமமுக கூட்டணியிடையில் 2 தொகுதிகள் உறுதியானது