இந்தியாவிலும் நிலநடுக்கமா? துருக்கி பூகம்பத்தை முன்பே கணித்த புவியியல் ஆய்வாளர் பகீர் தகவல்..!
துருக்கி மற்றும் சிரியாவில் விரைவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று ஆய்வாளர் ஒருவர் முன்பே எச்சரித்துள்ள ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
மத்திய கிழக்கில் அமைந்துள்ள துருக்கியில் நேற்று தொடங்கி தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதில் அந்நாடு நிலைகுலைந்துள்ளது. இதில் சிக்கி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.
பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என கூறப்படுகிறது. துருக்கி- சிரியா எல்லையில் காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகி நகருக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.8 ஆக பதிவாகியது.
100 ஆண்டுகளுக்கு பிறகு அப்பகுதியை தாக்கிய இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், பல கட்டடங்கள் குலுங்கி இடிந்து விழுந்து தரைமட்டமாகின. சிரியாவில் பாதிப்பு சற்றே குறைவாக இருந்தாலும், துருக்கியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு நாடுகள் நிவாரண உதவிகளையும், மீட்புப் படைகள் உள்ளிட்டவற்றை அனுப்பியும் உதவி வருகின்றன.
இதற்கு மத்தியில், துருக்கி மற்றும் சிரியாவில் விரைவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று ஆய்வாளர் ஒருவர் முன்பே எச்சரித்துள்ள ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகியது. டச்சு நாட்டைச் சேர்ந்த புவியியல் ஆய்வாளரான ஃப்ரான்க் ஹூக்கர் பீட்ஸ் கடந்த பிப்ரவரி 3ம் தேதியே நிலநடுக்கம் குறித்து எச்சரித்திருந்தார்.
இது தொடர்பாக பதிவிட்டிருந்த அவர், விரைவில் அல்லது பின்னர் தெற்கு மற்றும் மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய இடங்களில் 7.5 மெக்னிட்யூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். அவரது இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
அதேபோல அவரது எஸ்எஸ்ஜியோஸ் என்ற பக்கத்தில் பிப்ரவரி 4 முதல் 6 வரை பெரிய நில அதிர்வு செயல்பாடுகள் ஏற்படலாம், பெரும்பாலும் மிதமான அல்லது அதிக அளவாக 6 வரை இருக்கலாம். பிப்ரவரி 4 ஆம் தேதியன்று ஒரு பெரிய நில அதிர்வு நிகழ்வுக்கான சிறிய வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் பலத்த நில அதிர்வுக்குப் பிறகு மேலும் சில நிலநடுக்கங்கள் தொடரும் என்றும் அவர் கணித்துள்ளார். அதன் பிறகு மேலும் இரண்டு முறை பலத்த நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், துருக்கி நிலநடுக்கத்தை முன்பே கணித்த புவியியல் ஆய்வாளரான ஃப்ரான்க் ஹூக்கர் பீட்ஸ், இந்தியாவிலும் விரைவில் நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் பகுதியில் ஏற்பட்டு அதன் விளைவுகள் பாகிஸ்தான் வழியாக இந்தியா வரை ஏற்படும் என கணித்துள்ளார்.
அதன்படி, மேற்கு திசையில் பாகிஸ்தான் வழியாக இந்தியாவின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார். மேலும் இந்த நில அதிர்வானது இந்திய பெருங்கடல் வரை உணரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.