குடித்துவிட்டு, விமானத்தில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தாரா? விமான இருக்கை மறுக்கப்பட்டதா? என்ன ஆச்சு?
நியூயார்க்கில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் பிஸ்னஸ் வகுப்பில், குடிபோதையில் பயணித்த பயணி, 70 வயது மதிக்கத்தக்க சக பயணியின் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம், ஏர் இந்தியா விமானத்தின் பிஸ்னஸ் வகுப்பில் மது அருந்திய பயணி ஒருவர் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இருப்பினும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமானத்தில் செல்ல அவருக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
முன்னதாக, இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அலட்சியமாக செயல்பட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த நவம்பர் 26ஆம் தேதி, நியூயார்க்கில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் பிஸ்னஸ் வகுப்பில், குடிபோதையில் பயணித்த பயணி, 70 வயது மதிக்கத்தக்க சக பயணியின் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.
மதிய உணவுக்குப் பிறகு விளக்குகள் மங்கிய நிலையில் வைக்கப்பட்டிருந்தது. எனவே, என்ன நடக்கிறது என்பதே சிலருக்கு தெரியவில்லை. சிறுநீர் கழித்த பிறகு, மற்றொரு பயணி அவரை வெளியேறச் சொல்லும் வரை அந்த நபர் அங்கிருந்து நகரவில்லை என்று கூறப்படுகிறது.
அந்த பெண் விமான பணியாளர்களிடம் புகார் அளித்துள்ளார். தனது உடைகள், காலணிகள், பை ஆகியவை சிறுநீரில் நனைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். விமான குழுவினர் தங்களிடம் உடைகள் மற்றும் செருப்புகளை கொடுத்துவிட்டு இருக்கைக்குத் திரும்பச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
விமானம் டெல்லியில் தரையிறங்கிய பிறகு, அந்த பயணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலேயே அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரனுக்கு அந்தப் பெண் கடிதம் எழுதியதை அடுத்துதான் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அந்த நபருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாத தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, ஏர் இந்திய ஒரு குழுவினை அமைத்துள்ளது. 'நோ-ஃப்ளை லிஸ்டில்' சேர்க்க குழு பரிந்துரைத்தது. ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பதை அரசே முடிவு செய்ய வேண்டும்.
டாடா குழுமத்தின் தலைவருக்கு அந்த பெண் எழுதிய கடிதத்தில், "அந்த அழுக்கடைந்த இருக்கையில் உட்கார விரும்பவில்லை என கூறினேன். எனவே எனக்கு விமான பணியாளரின் இருக்கை வழங்கப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, எனது இருக்கைக்குத் திரும்பும்படி விமான பணியாளர்கள் கூறினர். சிறுநீர் கழிக்கப்பட்ட இருக்கை கவரை கொண்டு மூடப்பட்டிருந்தது. ஆனால், இன்னும் நாற்றம் அடித்து கொண்டிருந்தது. விமான பணியாளர்கள் இருக்கையில் கிருமிநாசினி தெளித்தனர்.
அதே இருக்கையில் அமர்வதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். அவருக்கு மற்றொரு விமான பணியாளரின் இருக்கை வழங்கப்பட்டது. அன்று முழுவதும் அவர் அங்கேயே படுத்து உறங்கினார். பல பிஸ்னஸ் வகுப்பு இருக்கைகள் காலியாக இருந்த போதிலும் தனக்கு அந்த இருக்கை வழங்கப்படவில்லை என அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.