Delhi Murder Case: டெல்லி கொடூரம்.. துண்டு துண்டாக வெட்டிய காதலன்: மோசமான அந்த உறவில், ஷ்ரத்தா நீடித்ததற்கு காரணம் என்ன?
டாக்ஸிக் உறவாக இருந்தபோதிலும் பெண்கள் அதில் தொடர்வதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.
பெண்கள் மற்றும் சிறுமிகள் குறிவைத்து கொல்லப்படும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐநா வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் 87,000 பெண்கள்/சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 137 பெண்கள்/சிறிமிகள் அவர்களது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதில், காதலரால் மட்டும் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை 30,000 ஆக பதிவாகியுள்ளது. அதாவது, கொல்லப்படும் பெண்களில் மூன்றில் ஒருவர், காதலரால் கொல்லப்படுகின்றனர்.
இந்த தரவில் இருந்து டெல்லி ஷ்ரத்தா கொலையை அணுகினால், ஷர்த்தா அவரது காதலர் ஆப்தாப்பால் கொல்லப்பட்டது ஆச்சரியம் அளிக்காது. ஆனால், காதலியை கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எரியும் குணம் கொண்ட நபருடன் ஷ்ரத்தாவால் எப்படி வசிக்க முடிந்தது என்ற கேள்வி எழாமல் இல்லை.
டாக்ஸிக் உறவாக இருந்தபோதிலும் பெண்கள் அதில் தொடர்வதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. துன்புறுத்தப்படுகிறோம் என்ற புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம். யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகளை எதிர்நோக்கி இருந்திருக்கலாம். பொருளாதார ரீதியாக அவரை சார்ந்து இருந்திருக்கலாம்.
தனிமையில் வாழ்வதற்கு பயம் இருந்திருக்கலாம். சுயமரியாதை குறைவாக இருந்திருக்கலாம். தன்னம்பிக்கை இல்லாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். பல நாள்களாக, டாக்ஸிக் உறவில் இருந்தவர்கள் அதில் இருந்து மீள்வதற்கு இதுபோன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
சில பெண்கள், தவறான நம்பிக்கைகளின் காரணமாக ஆரோக்கியமற்ற உறவில் இருக்கக்கூடும். அதாவது, துன்புறுத்தும் நபர் உண்மையில் தன்னை நேசிக்கிறார் அல்லது தொடர்ந்து அவருடன் இருந்தால் அவர் மாறக்கூடும் என்ற நம்பிக்கையில் இருக்கலாம். இம்மாதிரியான தவறான நம்பிக்கைகளே, டாக்ஸிக் உறவில் பெண்கள் விடுபட தடுக்கிறது.
இதுகுறித்து மனநல மருத்துவர் சாந்தினி துக்னைட் கூறுகையில், "பெண்கள் தவறான உறவுகளில் இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அவர்கள் வெளியேற பயப்படுவதுதான்.
அவர்கள் வெளியேற முயற்சித்தால், தங்கள் காதலர் தங்களை என்ன செய்வார் என்று அவர்கள் பயப்படலாம் அல்லது அவர்கள் வெளியேறினால் பொருளாதார ரீதியாக தங்களை ஆதரிக்க முடியுமா என்று அவர்கள் கவலைப்படலாம்.
காலப்போக்கில், காதலர் மாறிவிடுவார் அல்லது அனைத்து பிரச்னைகளுக்கும் தான் செய்த தவறு என்று அப்பெண் நம்பி இருக்கலாம். டாக்ஸிக் உறவில் துன்புறுத்தும் நபர்கள், பெரும்பாலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான தொடர்பைத் துண்டிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவரைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறார்.
இந்த தனிமைப்படுத்தல் ஒரு பெண்ணுக்கு உதவியை அணுகுவதை கடினமாக்குகிறது. எனவே, உறவில் இருந்து வெளியேறுவது சாத்தியமற்ற செயலாகத் தோன்றும்" என்கிறார்.