(Source: ECI/ABP News/ABP Majha)
Delhi Murder Case: கொடூரம்...டெல்லி கொலை வழக்கு...ஷ்ரத்தாவின் எலும்பை கிரைண்டிங் மிஷினால் பவுடர் ஆக்கிய ஆப்தாப்
Delhi Murder Case: ஷ்ரத்தாவை கொலை செய்து அவரது உடல் பாகங்களை வெட்டிய பிறகு, அவரின் எலும்பு துண்டுகளை பளிங்கு வெட்டும் இயந்திரத்தை கொண்டு துண்டாக்கி கிரைண்டிங் மிஷினால் பவுடர் ஆக்கியுள்ளார் ஆப்தாப்.
டெல்லியில் நடந்த கொலை வழக்கு நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் மனதை பதற வைத்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், இந்த கொடூர கொலை பற்றி இன்று வெளியான தகவல் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷ்ரத்தாவை கொலை செய்து அவரது உடல் பாகங்களை வெட்டிய பிறகு, அவரின் எலும்பு துண்டுகளை பளிங்கு வெட்டும் இயந்திரத்தை கொண்டு துண்டாக்கி கிரைண்டிங் மிஷினால் பவுடர் ஆக்கியுள்ளார் ஆப்தாப்.
கொலை செய்த மூன்று மாதங்களுக்கு பிறகு, ஷ்ரத்தாவின் தலையை ஆப்தாப் அப்புறப்படுத்தி இருக்கிறார் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான், காவல்துறையினர் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், பல அறிந்திராத தகவல்களை காவல்துறை வெளிகொண்டு வந்தது.
எப்படி கொலை செய்யப்பட்டது, உடல் பாகங்கள் எப்படி அப்புறப்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவல்கள் 6,600 பக்க குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. அதேபோல, கொலை நடந்த தினமான மே 18ஆம் தேதி, ஷ்ரத்தாவை கொலை செய்துவிட்டு ஜோமாட்டோ மூலம் சிக்கன் ரோலை ஆர்டர் செய்து சாப்பிட்டிருக்கிறார் ஆப்தாப்.
ஆப்தாப் அமீன் பூனவல்லா என்பவருக்கும் அவரது லிவ்-இன் காதலி ஷ்ரத்தாவுக்கும் கடந்த மே 18ஆம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார்.
வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நாள் இரவு எடுத்து சென்று காட்டில் எறிந்துள்ளார். இதற்காக, தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி உடல் பாகங்களை அப்புறப்படுத்தி உள்ளார்.
மெஹ்ராலி காட்டில் இருந்து வெட்டப்பட்ட உடல் பாகங்களை டெல்லி காவல்துறையினர் மீட்டனர். மண்டை ஓட்டின் அடிப்பகுதி, துண்டிக்கப்பட்ட தாடை பகுதி மற்றும் பல எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. அவை, ஷ்ரத்தாவின் தந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் பொருந்தி பார்க்க தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், மீட்கப்பட்ட எலும்புகளில் இருந்து டிஎன்ஏ ஷ்ரத்தாவின் தந்தையுடன் பொருந்தி போனது. ஷ்ரத்தா தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் மறைத்ததாகவும் ஆப்தாப் ஒப்புக்கொண்டுள்ளார். கொலை செய்த பிறகு வீட்டில் இருந்த ஷர்த்தாவின் புகைப்படங்களை அவர் அழித்துள்ளார்.
இந்த கொலை தொடர்பாக தினம் தினம் வெளியாகும் செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.