Delhi Bomb Blast: “டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்“: என்ஐஏ அறிவிப்பு - உதவிய ஒருவன் கைது
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என்பதை என்ஐஏ உறுதி செய்துள்ளது. மேலும், அதற்கு உதவிய முக்கிய நபர் ஒருவனை கைது செய்துள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி போக்குவரத்து சிக்னலில் நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதல், ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என என்ஐஏ அறிவித்துள்ளது. மேலும், அந்த தாக்குதலுக்கு கார் வாங்கிக் கொடுத்து உதவிய ஒருவனையும் கைது செய்துள்ளது என்ஐஏ.
டெல்லியில் நடந்த கார் வெடிகுண்டு சம்பவம்
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள செங்கட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் நுழைவு வாயில் அருகே, கடந்த 10-ம் தேதி மாலை, போக்குவரத்து சிக்னலில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் காரை இயக்கிய டாக்டர் உமர் நபி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், இது ஒரு திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், காரை ஓட்டிய உமர் நபி ஒரு பயங்கரவாதி என்றும், இச்சமபவத்தில் அவர் தற்கொலைப்படை பயங்கரவாதியாக செயல்பட்டதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடை டாக்டர்கள் கைது
மேலும், இச்சம்பவத்தில் காஷ்மீர் டாக்டர் முசாமில், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பெண் டாக்டர் ஷாகீன், லக்னோவில் கைது செய்யப்பட்டார். அரியானா மாநிலம் மேவாட்டை சேர்ந்த மவுலவி இஷ்தியாக் என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, அல்-பலா பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் அங்கீகாரத்திற்கு இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கார் வாங்கிக் கொடுத்த நபரை தூக்கிய என்ஐஏ
இந்த சூழலில், டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய நபரை என்ஐஏ அதிரடியாக கைது செய்துள்ளது. காஷ்மீரின் சம்பூரா பகுதியைச் சேர்ந்த அமீர் ரஷித் அலி என்பவனை, டெல்லியில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நபர், குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்காக உமர் நபிக்கு டெல்லியில் இருந்து கார் வாங்கிக் கொடுத்தது தெரியவந்துள்ளது. அதோடு, உமருடன் சேர்ந்து இவனும் சதித் திட்டம் தீட்டியவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய உமர் நபிக்கு சொந்தமான மேலும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் உள்பட 73 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் என்ஐஏ கூறியுள்ளது.





















