(Source: ECI/ABP News/ABP Majha)
IRCTC Warning : ரயிலில் மத துவேஷ சர்ச்சைக்கு உரிய செய்தித்தாள் விநியோகம்: ஐஆர்சிடிசி எச்சரிக்கை
ரயிலில் சர்ச்சைக்குரிய செய்தித்தாள் வழங்கப்பட்ட விவகாரத்தில், ஐஆர்சிடிசி சம்பந்தப்பட்ட உரிமதாரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரயிலில் சர்ச்சைக்குரிய செய்தித்தாள் வழங்கப்பட்ட விவகாரத்தில், ஐஆர்சிடிசி சம்பந்தப்பட்ட உரிமதாரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நாளிதழ் என்ற பெயரில் தி ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ் நாளிதழ் விநியோகிக்கப்பட்டது. அந்த நாளிதழில், 'இஸ்லாமிய ஆட்சியின்கீழ் இந்துக்கள், சீக்கியர்கள், புத்தர்களின் படுகொலை அங்கீகரிக்கப்பட வேண்டும்'. 'அவுரங்கசீப்பையும் ஹிட்லரைப் போல படுகொலைகளைச் செய்பவர் என ஐ.நா. முத்திரை குத்த வேண்டும்' போன்ற விநோதமான கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.
இதற்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோபிகா பக்ஷி என்னும் ட்விட்டராட்டி, ''இன்று காலை பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினேன். அப்போது அப்பட்டமாக பிரச்சாரம் செய்யும் தி ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ் நாளிதழ் என்னையும் பிறரையும் வரவேற்றது. இதுகுறித்துக் கேள்விப்பட்டதுகூட இல்லை. இதை ஐஆர்சிடிசி எப்படி அனுமதிக்கிறது?'' என்று பதிவிட்டிருந்தார். இதுகுறித்து வேறு சில பயணிகளும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
This morning I boarded the Bangalore-Chennai Shatabdi Express only to be greeted by this blatantly propagandist publication on every other seat- The Aryavarth Express. Had never even heard of it. How is @IRCTCofficial allowing this??? pic.twitter.com/vJq7areg8u
— Gopika Bashi (@gopikabashi) April 22, 2022
இதுகுறித்து ஆங்கில ஊடகத்திடம் பேசிய நாளிதழ் உரிமதாரர் பி.கே. ஷெஃபி, ''அங்கீகரிக்கப்பட்ட நாளிதழ்களுடன் இணைப்பிதழாக சம்பந்தப்பட்ட நாளிதழ் தவறுதலாக வழங்கப்பட்டுள்ளது.
நாளிதழை விநியோகிக்கும் ஊழியர்களுக்கு, அதன் உள்ளடக்கம், இணைப்புகள் குறித்த புரிதல் கிடையாது. தாங்கள் விநியோகிக்கும் செய்தித்தாள்களில் என்ன இருக்கிறது என்று கூட அவர்கள் படிப்பதில்லை. இனி இணைப்பிதழ்கள், துண்டு பிரசுரங்களைத் தவிர்த்து, பிரதான செய்தித்தாள்களை மட்டும் விநியோகிக்க உத்தரவிட்டுள்ளேன்'' என்று விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக இதற்கு பதிலளித்த ஐஆர்சிடிசி நிர்வாகம், ''உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட, வழக்கமான செய்தித்தாளுடன் இணைப்பாக, ''தி ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ்'' நாளிதழ் இருந்துள்ளது. வருங்காலத்தில் இத்தகைய இணைப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்று செய்தித்தாள் விற்பனையாளரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கண்காணிப்புக் குழு வருங்காலத்தில் கடுமையாகக் கண்காணிக்கும். சம்பந்தப்பட்ட உரிமதாரருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தது.
எனினும் சிறிது நேரத்தில் அந்தப் பதிவுகள் நீக்கப்பட்டன. ஐஆர்சிடிசி தெரிவித்த, உரிமதாரருக்கு அறிவுறுத்தல் என்ற பார்வை சரியான புரிதலைத் தராததால் பதிவுகள் நீக்கப்பட்டன என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஐஆர்சிடிசியின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ரஜினி ஹசிஜா கூறும்போது, "இதுகுறித்து உரிமதாரரை எச்சரித்துள்ளோம். ஒப்பந்தத்தின்படி, உரிமம் பெற்றவர்கள் டெக்கான் ஹெரால்டு மற்றும் கன்னடப் பத்திரிகையின் இணைப்பிதழ்களை மட்டுமே வழங்க வேண்டும். வருங்காலத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஒப்பந்த நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்