அதிரடியில் இறங்கிய காங்கிரஸ்.. ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ் தலைவர் கார்கே.. பயங்கர பிளானா இருக்கேப்பா
காங்கிரஸ் காரிய கமிட்டியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக மத்தியில் பாஜகவின் ஆட்சி நடந்து வருகிறது. 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக அசுர வெற்றிபெற்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயத்தில், மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
தேர்தல் தோல்வி எதிரொலி:
இதற்காக, காங்கிரஸ் உள்பட 28 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் முதல் கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவிலும் இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலும் நடைபெற்றது.
ஐந்து மாநில தேர்தல் காரணமாக INDIA கூட்டணியின் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. ஆனால், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், INDIA கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரிய விரிசலை ஏற்படுத்தியது. ஏன் என்றால், INDIA கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு, நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தொகுதிகள் ஒதுக்கவில்லை. தெலங்கானாவை தவிர்த்து 4 மாநிலங்களிலும் தனித்தே களம் கண்டது.
குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்த்தபோதிலும், அக்கட்சிக்கு காங்கிரஸ் ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், வெளிப்படையாகவே தனது அதிருப்தியை பதிவு செய்திருந்தார். இறுதியில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
எதிர்பார்ப்பை கிளப்பிய காங்கிரஸ் காரிய கமிட்டி:
இச்சூழலில், வரும் டிசம்பர் 19ஆம் தேதி, INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம், தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், வரும் டிசம்பர் 21ஆம் தேதி, காங்கிரஸ் காரிய கமிட்டியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெற்ற தோல்வி குறித்து காரிய கமிட்டி கூட்டத்தில் ஆராயப்படும் என கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
நேற்றுதான், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத் நீக்கப்பட்டு, புதிய தலைவராக ஜிது பட்வாரி நியமிக்கப்பட்டார். சத்தீஸ்கர் சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் சரண்தாஸ் மஹந்த், காங்கிரஸ் சட்டமன்ற கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.