எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு பெரும் பின்னடைவு.. அவசர சட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு அல்வா கொடுத்த காங்கிரஸ்..?
டெல்லி அவசர சட்ட விவகாரத்தில், ஆம் ஆத்மியை காங்கிரஸ் ஆதரிக்காது என கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, டெல்லி என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்திறது.
குறிப்பாக, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் துணை நிலை அளுநருக்கும் உச்சக்கட்ட அதிகார போட்டி நிலவி வருகிறது. இந்த பிரச்னை, ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அவசர சட்ட விவகாரம்:
ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது; அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் உட்பட்டவர் என்றும் உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு சாதகமாக அண்மையில் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு, அவசர சட்டம் கொண்டு வந்து, டெல்லி அரசில் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் துணை ஆளுநருக்கு வழங்கப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு, இந்த அவசர சட்டம் பெரும் தலைவலியை தந்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் திட்டம்:
இந்த விவகாரத்தில் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவை கோரி வருகிறார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். மக்களவையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால், மாநிலங்களவையில் டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதாவை கொண்டு வரும்போது, எதிர்க்கட்சிகளின் உதவியோடு அதை தோற்கடிக்க அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டு வருகிறார்.
அதற்காக, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோர, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த விவகாரம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பேசுவதாக மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இச்சூழலில், டெல்லி அவசர சட்ட விவகாரத்தில், ஆம் ஆத்மியை காங்கிரஸ் ஆதரிக்காது என கூறப்படுகிறது. டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் இன்று கட்சித் தலைமையை தனித்தனியாக சந்தித்து, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டாம் என ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் கருத்து கேட்பதற்காக இரு மாநில தலைவர்களின் கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூட்டினார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார். அப்போது, இரண்டு மாநிலங்களை சேர்ந்த பெரும்பான்மையான தலைவர்கள், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என தெரிவித்தாக கூறப்படுகிறது.
ஆம் ஆத்மியை பாஜகவின் 'B' என விமர்சித்த இருமாநில தலைவர்கள், "டெல்லி மற்றும் பஞ்சாப் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸின் நலன்களுக்கு அவர் கேடு விளைவித்தார்" என குற்றம்சாட்டினர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கெஜ்ரிவாலக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காத பட்சத்தில், அது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு பெரும் பின்னடைவாக அமையும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.