Uniform Civil Code: பொது சிவில் சட்டம்..குழப்பத்தில் காங்கிரஸ்?.. மூத்த தலைவர் சிதம்பரம் தலைமையிலான குழு முக்கிய முடிவு
பொது சிவில் சட்டத்திற்கான வரைவு வெளியிடும் வரை, அதிகாரப்பூர்வு நிலைபாடு எடுக்கப்பட மாட்டாது என காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது.
சமீபத்தில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது. வெவ்வேறு சமூகங்களுக்கு தனி சட்டங்கள் என்ற இரட்டை அமைப்புடன் நாடு இயங்க முடியாது" என்றார்.
பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் மத்திய பாஜக அரசு:
இந்த பேச்சின் மூலம் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுத்து வருவது தெளிவாகிறது. இதற்கு, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, பொது சிவில் சட்டம் தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்டு வந்த சட்ட ஆணையம், அதற்கான காலக்கெடுவை ஜூலை 28ஆம் தேதி வரை நீட்டித்தது.
இதற்கு மத்தியில், பொது சிவில் சட்டம் தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. கடந்த ஜூலை 15ஆம் தேதி, இந்தக் குழுவின் உறுப்பினர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) தலைமையகத்தில் ரகசிய கூட்டத்தை நடத்தினர்.
ஆதரவா? எதிர்ப்பா? நிலைபாட்டை அறிவிக்காத காங்கிரஸ்:
அதில், பெரும்பாலான தலைவர்கள், பொது சிவில் சட்டத்திற்கு எதிராகவே தங்களின் கருத்தை தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பன்முகத்தன்மையை மதிக்காத எந்த ஒரு சட்டத்தையும் நிராகரிக்க முடிவு செய்யப்பட்டது. தனிச் சட்டங்களில் சீர்திருத்தங்கள் தேவைப்பட்டாலும், வெவ்வேறு சமூகங்களுக்கான தனிச்சட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் ஒரே சட்டத்தை கொண்டு வருவது அவசியமற்றது என தலைவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆலோசனை வழங்கும் வகையில் அமைக்கப்பட்ட குழுவில் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் ப. சிதம்பரம், அபிஷேக் சிங்வி, சல்மான் குர்ஷித், மணீஷ் திவாரி, விவேக் தங்கா மற்றும் கே.டி.எஸ். துஸ்லி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களை தவிர்த்து, ஒடிசாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரும் பழங்குடியின தலைவருமான சப்தகிரி உலகா மற்றும் தலித் சமூகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எல். ஹனுமந்தய்யா ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த முக்கிய முடிவு:
பொது சிவில் சட்டத்திற்கான வரைவு வெளியிடும் வரை, அதிகாரப்பூர்வு நிலைபாடு எடுக்கப்பட மாட்டாது என காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது. குழுவில் இடம்பெற்ற தலைவர்கள், "இன்னும் எதுவும் முடிவாகவில்லை என்றாலும் வரைவுக்காகக் காத்திருப்போம்.
ஆனால், இந்த காலக் கட்டத்தில் பொது சிவில் சட்டம் தேவை இல்லை என்று எங்களில் பெரும்பாலோர் நினைக்கிறோம். 2018 ஆம் ஆண்டில், 21 வது சட்ட ஆணையம் தனது அறிக்கையில் பொது சிவில் சட்டம் என்பது சாத்தியமற்றது என்று கூறியது. வெவ்வேறு சமூகங்களின் தனிப்பட்ட சட்டங்களை சீர்திருத்த தேவை இருக்கலாம். சம்பந்தப்பட்ட சமூகத்துடன் கலந்தாலோசித்த பிறகு முடிவு செய்யலாம்" என கருத்துகளை முன்வைத்ததாக சொல்லப்படுகிறது.