கர்நாடகா தந்த தன்னம்பிக்'கை'..! வட மாநிலங்களை கைப்பற்ற வியூகம் வகுக்கும் காங்கிரஸ்..! பரபரக்கும் அரசியல் களம்..!
கர்நாடக தேர்தலில் பெற்ற வெற்றி காரணமாக வடமாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த இரண்டு மக்களவை தேர்தலில் வென்ற பாஜக, 2014ஆம் ஆண்டு முதல் 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
கர்நாடக வெற்றி:
அதற்கு இன்னும் 11 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்தாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது.
மூன்று மாநிலங்களிலும் பாஜக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, நாடு முழுவதும் கவனம் ஈர்த்தது கர்நாடக தேர்தல். தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் நேரடியாக மோதி கொண்டதால் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது.
காங்கிரஸ் தயார்:
இதில், காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதில், 224 சட்டமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றியது. பாஜகவை வீழ்த்த பல்வேறு கட்சிகள் வியூகம் அமைத்து வரும் நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கம் தந்தது.
கடந்த ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், கர்நாடகாவிலும் ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, தங்களின் கவனத்தை வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் செலுத்த காங்கிரஸ் தயாராகியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு தயார்:
இந்தாண்டின் இறுதியில், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், ராஜஸ்தான், பாரத் ராஷ்டிர சமிதி ஆளும் தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதற்காக, தேர்தல் களத்தை தயார் செய்ய தொடங்கியுள்ளது காங்கிரஸ். தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களுடன் கட்சி மேலிடம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.
வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடத்தப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில், உட்கட்சி பூசலால் காங்கிரஸ் தவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து கார்கே தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
உட்கட்சி மோதல்:
ராஜஸ்தானில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முதலமைச்சருமான அசோக் கெலாட், கட்சியின் இளம் தலைவர் சச்சின் பைலட் ஆகியோருக்கிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மத்திய பிரதேசத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா, பாஜகவில் இணைந்து காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணமாக அமைந்தார்.
தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி தற்போது ஆட்சியில் உள்ளது. தேசிய அளவில் பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் கேசிஆர் அங்கு முதலமைச்சராக இருந்தாலும், அங்கு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.