Child Trafficking: கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தப்பட்ட 26 குழந்தைகள் மீட்பு.. 12 பேர் கைது
அசாமில் இருந்து மகாராஷ்ட்ரா சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 26 குழந்தைகளை ரயில்வே போலீசார் மீட்டனர். மேலும். இதுதொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட இந்தியாவில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் கடந்த சில காலங்களாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் காமாக்யாவில் இருந்து மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மும்பையில் உள்ள லோக்மன்யா வரை செல்லும் ரயிலில் குழந்தைகள் கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
மகாராஷ்ட்ரா, சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த ரயிலில் குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, ரயில்வே பாதுகாப்பு பிரிவு, ரயில்வே பாதுகாப்பு போலீசார், ரயில்வே குழந்தைகள் உதவிப்பிரிவு மற்றும் குழந்தைகள் நல அமைப்பு இணைந்து களத்தில் இறங்கினர். ரயில் பயணிக்கிற 7 மாநிலங்களிலும் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் களமிறங்கினர்.
பீகார் மாநிலத்தில் உள்ள ஹாஜிபூர் ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த 12 குழந்தைகளை போலீசார் மீட்டனர். 5 குழந்தைகள் சாப்ரா ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டனர். இதையடுத்து, 9 குழந்தைகள் ஒடிசா மாநிலத்தில் உள்ள சோன்பூர் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 10 வயதிற்கும் குறைவாகவே இருக்கும். கடத்தப்பட்ட குழந்தைகள் அனைவரும் ஆண் குழந்தைகள். அவர்களிடம் எந்தவொரு ஆவணங்களும் இல்லை. மீட்கப்பட்ட குழந்தைகளின் முகவரிகள், தொலைபேசி எண்கள் சேகரிக்கப்பட்ட அவர்களது பெற்றோர்களை அழைத்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் முறையான அறிவுரைகள் வழங்க திட்டமிட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக குழந்தை கடத்தல்காரர்கள் 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திற்கு பிறகு மட்டும், கடத்தப்பட்ட சுமார் 9 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு காரணமாக தொழில் முடக்கம், பொருளாதார இழப்பு ஆகியவற்றை சரிசெய்வதற்காக பல்வேறு தொழிற்நிறுவனங்களும் சட்ட விரோதமாக குழந்தைகளை கடத்தி முயற்சிக்கும் என்று ஏற்கனவே மத்திய அமைச்சகம் எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நல ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் மத்திய மற்றும் மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.