Supreme Court: உலகிலேயே மிகவும் பரபரப்பான நீதிமன்றம் இந்திய சுப்ரீம் கோர்ட் - சிங்கப்பூர் தலைமை நீதிபதி பாராட்டு
இந்திய திருநாட்டின் மாபெரும் ஜனநாயக அமைப்பான உச்சநீதிமன்றம் தனது 73வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளதற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிகிறது.
இந்தியாவின் உச்சபட்ச ஜனநாயகமாக கருதப்படுவதும், நாட்டின் சாதாரண குடிமகனும் தனக்கு நீதி கிடைக்க இறுதியாக செல்லுமிடமாகவும் கருதப்படுவது உச்சநீதிமன்றம். நாட்டின் சீரமைப்பிற்கும், வளர்ச்சிக்கும் ஆக்கப்பூர்வமாக பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ள உச்சநீதிமன்றம் 73ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. 73வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள இந்திய உச்சநீதிமன்றத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நாட்டில் இதுவரை ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால், வழக்குகள் குவிந்துவிடாமல் இருக்க 1980ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களில் உச்ச நீதிமன்றத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 108. இவ்வளவு வழக்குகளையும் விசாரணை செய்து எப்படி முடித்து வைப்பது? என்று யோசிக்காமல் உச்ச நீதிமன்றம் செயல்பட்டதால், கடந்த 3 மாதங்களில் 12 ஆயிரத்து 471 வழக்குகளை முடித்து வைத்துள்ளது.
இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் 73வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் பங்கேற்றார். விழாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் பேசும்போது, உலகிலேயே மிகவும் பரபரப்பானது இந்திய உச்சநீதிமன்றம் என்று பாராட்டியுள்ளார். பாரம்பரிய நடைமுறைகளை மட்டும் கடைப்பிடிக்கக் கூடாது. புதிய வழிகளுக்கு மாற வேண்டும். மாறிவரும் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ள அவ்வப்போது நீதித்துறையினர் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக தற்போது டி.ஒய். சந்திரசூட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.