சாப்பாடு பரிமாற தாமதம்; கோபத்தில் மணமகன் எடுத்த முடிவு! ஷாக்கான மணப்பெண்!
மெஹ்தாப் என்ற மணமகன் தனது திருமண ஊர்வலத்துடன் மணமகளின் இல்லத்திற்கு வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
சாப்பாடு பரிமாற தாமதமானதால் மணமகன் திருமணத்தையே நிறுத்திவிட்டு உறவுக்கார பெண்ணை திருமணம் செய்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சந்தவுளி நகரில் ஹமீத்பூர் கிராமத்தில் டிசம்பர் 22 ஆம் தேதி மெஹ்தாப் என்ற மணமகன் தனது திருமண ஊர்வலத்துடன் மணமகளின் இல்லத்திற்கு வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. மணமகளின் குடும்பத்தினர் விருந்தினர்களை அன்புடன் வரவேற்றனர், ஆனால் மெஹ்தாபின் உறவினர்கள் போதுமான உணவு கிடைக்கவில்லை என்று கூறியதால் அங்கு பரபரப்பு நிலவியது. மீண்டும் சாப்பாடு வர தாமதமானதாக தெரிகிறது. இதனால் உறவினர்களும் மெஹ்தாப்பின் நண்பர்களும் கிண்டல் செய்துள்ளனர்.
இந்த சூழ்நிலையால் கோபமடைந்த மணமகனும் அவரது உறவினர்களும் திருமணத்தை நிறுத்துங்கள் எனக் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினர். அதிர்ச்சியூட்டும் விதமாக, மெஹ்தாப் அதே இரவில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. திருமணம் செய்து கொண்ட பெண் மெஹ்தாப்பின் உறவுக்காரப் பெண் என்று கூறப்படுகிறது.
பின்னர் கைவிடப்பட்ட மணமகளின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். திருமணத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு மெஹ்தாப்பின் குடும்பத்தினர் ரூ.1.60 லட்சத்தை வரதட்சணையாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து மணப்பெண் கொடுத்த புகாரில், “டிசம்பர் 22ஆம் தேதி திருமண ஊர்வலம் நடைபெற்றது. மணமகன் மணமகள் வீட்டிற்கு வந்தார்.அப்போது இரவு உணவு பறிமாறப்பட்டது. மெஹ்தாப் உடன் திருமணம் செய்வது என்று 7 மாதங்களுக்கு முன்பு முடிவானது. இரவு உணவு பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பின்னர், எனது பெற்றோரை திட்டிவிட்டு தாக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டனர். எனக்கு நீதி வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
டிசம்பர் 25 அன்று இரு தரப்பினருக்கும் இடையே ஒரு பேச்சுவார்த்தையை போலீசார் தலையிட்டு மத்தியஸ்தம் செய்தனர். சந்திப்பின் போது, மெஹ்தாப்பின் குடும்பத்தினர் வரதட்சணையாகப் பெற்ற ரூ.1.60 லட்சத்தை திருப்பிக் கொடுத்தனர்.
பின்னர் மணமகளின் குடும்பத்தினர் புகாரை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர். மெஹ்தாப் அல்லது அவரது குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்று எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்கினர்.