சில்வர் ஜுப்ளியில் திருவள்ளுவர் சிலை: கண்ணாடி இழை பாலம் டூ தோரணவாயில் அடிக்கல் வரை! அரசின் அசத்தல் ஏற்பாடு!
இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் விழா இன்று மாலை தொடங்குகிறது. இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதியம் கன்னியாகுமரி செல்கிறார்.
கன்னியாகுமரியில் கடலின் நடுவே பாறையில் நிறுவப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலை 25 ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கிறது. இதனால் அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழா இன்று, நாளை என 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி செல்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் விழா இன்று மாலை தொடங்குகிறது. இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதியம் கன்னியாகுமரி செல்கிறார். மாலை 4.30 மணிக்கு பூம்புகார் படகு குழாமுக்கு சென்று மணல் சிற்பத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து படகு மூலமாக சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு திருவள்ளுவரின் பாதத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்.
இதையடுத்து திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில் ரூ. 37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைக்கிறார். அதோடு பூம்புகார் நிறுவனத்தின் கைவினைப் பொருட்கள் அங்காடியையும் திறந்து வைக்கிறார்.
மாலை 6.30 மணிக்கு அய்யன் திருவள்ளுவர் உருவச்சிலை படகு குழாமில் 3 டி லேசர் காட்சியையும் வீடியோ படக்காட்சிகளையும் கண்டுகளிக்க உள்ளார். மேலும் திருக்குறள் நெறி பரப்பும் 25 அறிஞர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.
நாளை காலை 9.30 மணிக்கு தமிழ்தாய் வாழ்த்துடன் திருவள்ளுவர் சிலை வெள்ளி நிகழ்ச்சி தொடங்குகிறது. இதில், தலைமைச்செயலாளர் முருகானந்தம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், வைரமுத்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் சாலைக்கு அய்யன் திருவள்ளுவர் சாலை எனவும் பெயர் சூட்டுகிறார். திருவள்ளுவர் பசுமை பூங்காவை திறந்து வைப்பதோடு, திருக்குறள் கண்காட்சியையும் தொடங்கி வைக்கிறார் முதல்வர். கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.