(Source: ECI/ABP News/ABP Majha)
Special Forces: ராணுவத்தின் சிறப்பு படையில் சேர எந்த பெண்ணும் தகுதி பெறவில்லை - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
உளவுத்துறையில் தகவல்களை சேகரிப்பதற்காகவும் சிறப்பு படை வீரர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். இதற்காக, அவர்களுக்கு மிகவும் கடினமான உடல் ரீதியான, மன ரீதியான பயற்சிகள் வழங்கப்படும்.
இந்திய பாதுகாப்பு படைகளில் பல பெண் வீரர்கள் பணி புரிந்து வந்தாலும் அதன் சிறப்பு படைகளில் ஒரு பெண் அதிகாரி கூட பணியமர்த்தப்படவில்லை. சிறப்பு படை வீரர்கள், பொதுவாக, ரகசிய நடவடிக்கைகளிலும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைளிலும்தான் களம் இறக்கப்படுவார்கள்.
உளவுத்துறையில் தகவல்களை சேகரிப்பதற்காகவும் சிறப்பு படை வீரர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். இதற்காக, அவர்களுக்கு மிகவும் கடினமான உடல் ரீதியான, மன ரீதியான பயற்சிகள் வழங்கப்படும். பாதுகாப்பு படைகளின் சிறப்பு பிரிவுகளிலும் பெண் அதிகாரிகளை சேர்த்து கொள்ள வேண்டும் என்பது தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது.
"ராணுவத்தின் சிறப்பு படையில் சேர இதுவரை எந்த பெண்ணும் தகுதி பெறவில்லை"
அதன் தொடர்ச்சியாக, சிறப்பு பிரிவுகளில் சேர்ந்து கொள்ள பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கப்பட்ட போதிலும், இதுநாள் வரை ஒரு பெண் அதிகாரி கூட, சிறப்பு பிரிவில் சேர்த்து கொள்ளப்படவில்லை. இதுகுறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட், "பாதுகாப்பு படையின் சிறப்பு பிரிவில் சேர இதுவரை எந்த பெண்ணும் தகுதி பெறவில்லை" என பதில் அளித்துள்ளார்.
"எந்தவொரு பாலின பாரபட்சமும் இல்லாமல், இந்திய ஆயுதப் படைகளில் பணிபுரியும் பெண் அதிகாரிகள், சிறப்புப் படைகளில் தாங்களாகவே முன்வந்து சேர அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் தரத் தேவைகளை (QRs) பூர்த்திசெய்ய வேண்டும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில்:
இந்திய விமானப்படையில், மொத்தம் இரண்டு பெண் அதிகாரிகள் இதுநாள் வரை சிறப்புப் படைப் பயிற்சிக்காக முன்வந்துள்ளனர். மேலும். பயிற்சியில் முனைப்பு காட்டினர். ஆனால், பயிற்சியில் அவர்களால் தேர்ச்சி பெற முடியவில்லை. இந்திய கடற்படையில், 20 பெண் அக்னிவீரர்கள் (மாலுமிகள்) சிறப்புப் படைகளில் சேர்க்கைக்கான தகுதித் தேர்வில் கலந்து கொண்டனர். ஆனால், அவர்களில் யாரும் தகுதி பெறவில்லை" என மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
துணை ராணுவ சிறப்பு படைகள், கடற்படையின் கமாண்டோக்கள் மற்றும் இந்திய விமான படையின் கமாண்டோக்கள் பல மாதங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மேலும், அவர்கள் சிறப்புப் படையில் சேர தகுதி பெறுவதற்கு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் மிக உயர்ந்த தரத்தை பராமரிக்க வேண்டும். அதில், தேர்ச்சி பெற்றவுடன், குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்ப அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
முப்படைகளில் அதிக வீரர்களை கொண்டதாக ராணுவம் உள்ளது. அதில், 1,705 பெண் அதிகாரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.