தடுப்பூசி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கேள்விகளும், அரசின் கொள்கை மாற்றமும் !
வரும் 21-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று இன்று பிரதமர் மோடி அறிவித்தார். மத்திய அரசின் இந்த திடீர் கொள்கை மாற்றத்திற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் கடந்த வாரம் உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளாக இருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. ஏனென்றால் கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை தொடர்பாக சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தது.
உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட், எல்.என்.ராவ் மற்று எஸ்.கே.பட் கொண்ட அமர்வு, "18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி அளிக்காமல் இருப்பது மிகவும் மோசமான கொள்கை. 2021-2022 நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதை வைத்து ஏன் இவர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கவில்லை" என சாடியுள்ளது. அத்துடன் மேலும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
குறிப்பாக மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மத்திய இலவசமாக தடுப்பூசி வழங்கியுள்ளது. ஆனால் அதே 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் கட்டணம் வசூலித்து தடுப்பூசி செலுத்துவதற்கு என்ன காரணம். இந்த கொள்கை முடிவை அரசு எப்படி எடுத்தது. இப்படி ஒரு முடிவை அரசு எடுக்கக் காரணம் என்ன?
அதேபோல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் கோவின் தளத்தில் பதிவு செய்துவிட்டு தான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற முடிவு எப்படி எடுக்கப்பட்டது. ஏனென்றால் இந்தியாவில் இன்னும் கிராமப்புறங்கள் பல இடங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் சரியாக சென்று சேரவில்லை. அப்படி இருக்கும் போது இதை ஏன் அரசு கருத்தில் கொள்ளவில்லை. 45 வயதுக்கு மேல் உள்ளவர்களை மட்டும் தடுப்பூசி மையங்களுக்கு வந்து பதிவு செய்துகொள்ள அனுமதித்த மத்திய அரசு ஏன் அதை 18 வயதினருக்கும் கடைபிடிக்கவில்லை.
மேலும் இந்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்படி என்றால் அதற்கான வரைவு திட்டம் ஏதாவது மத்திய அரசிடம் உள்ளதா? ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தடுப்பூசி செலுத்தப்படும். டிசம்பர் 31 வரை எவ்வளவு தடுப்பூசி தேவைப்படும்? என்பது தொடர்பான திட்டம் உள்ளதா? ஏற்கெனவே பல மாநிலங்கள் தடுப்பூசிகளை வாங்க வெளிநாடுகளில் டெண்டர் விட்டுள்ளன. ஆனால் சிலர் மாநிலங்களுக்கு தடுப்பூசி விற்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதுகுறித்தும் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதேபோல் தற்போது இந்தியாவில் நிலவி வரும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் தனியார் மருத்துவமனைகள் அதிக விலைக்கு தடுப்பூசிகளை விற்பனை செய்கின்றனவா? என்பதை மத்திய அரசு எவ்வாறு கண்காணிக்க உள்ளது? அதற்கு அதும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளனவா? மேலும் தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வழங்கும்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி எவ்வாறு கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு என்று கொடுக்கப்பட்ட தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகள் அந்த மாநிலத்தில் மட்டும்தான் பயன்படுத்துகிறதா? என்றும் உச்சநீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இந்தக் கேள்விகள் அனைத்திருக்கும் பதிலளிக்க மத்திய அரசை உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சூழலில் தற்போது திடீரென்று மத்திய அரசு தனது தடுப்பூசி கொள்கையை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஜூன் 21 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி- பிரதமர் மோடி