நெருங்கும் பீகார் தேர்தல்.. பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த மோடி.. விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு
Caste Census: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடி தலைமையிலான அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த மோடி:
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டும் என்று இன்று முடிவு செய்துள்ளது" என்றார்.
தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "காங்கிரஸ் அரசுகள் எப்போதும் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து வந்துள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டில், மறைந்த டாக்டர் மன்மோகன் சிங், அமைச்சரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தை பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த விஷயத்தை பரிசீலிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை பரிந்துரைத்துள்ளன. இருந்தபோதிலும், காங்கிரஸ் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கவில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன?
காங்கிரசும் இந்தியா கூட்டணி கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தியுள்ளன என்பது நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது. சில மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளன.
சில மாநிலங்கள் இதைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், வேறு சில மாநிலங்கள் அரசியல் கோணத்தில் இருந்து மட்டுமே இத்தகைய கணக்கெடுப்புகளை நடத்தி இருக்கின்றன. அவையும் வெளிப்படையாக நடத்தவில்லை. இத்தகைய கணக்கெடுப்புகள் சமூகத்தில் சந்தேகங்களை ஏற்படுத்தின. நமது சமூக அமைப்பு அரசியல் காரணங்களால் தொந்தரவு செய்யப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை சேர்க்க வேண்டும்" என்றார்.
பீகாரில் இந்தாண்டு அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடி அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில், சாதிவாரி கணக்கெடுப்பை மையப்படுத்தி ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் செய்தார். அது, காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் பலன் தந்தது. 99 தொகுதிகளில் வென்று பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
எந்த சாதி அதிகம் உள்ளது, அதன் சமூக, பொருளாதார நிலை எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு உதவுகிறது. தேசிய அளவில் எடுக்கப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை தவிர பல மாநிலங்களில் சாதிவாரி ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, பீகாரில் ஏற்கனவே சாதிவாரி ஆய்வு எடுக்கப்பட்டுவிட்ட நிலையில், தெலங்கானாவில் சாதிவாரி ஆய்வை நடத்த காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.





















