Budget 2024: உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.. நாளை தாக்கலாகும் இடைக்கால பட்ஜெட்.. என்ன ஸ்பெஷல்?
Interim Budget 2024: இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழலில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளது. தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. எனவே, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
பொதுத்தேர்தல் முடிந்தவுடன் புதிய அரசு அமைந்த பிறகு, வரும் ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை நிதி பற்றாக்குறையை குறைப்பதிலும் சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதிலும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அதே சமயத்தில் கொள்கை அளவில் பெரிய மாற்றங்களை பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?
பொதுவாக பட்ஜெட் என்றால் எவ்வளவு செலவாகும், எதற்கு எவ்வளவு செலவு செய்யப்படும் என்பது குறித்த அனைத்து தகவல்களும் அடங்கியிருக்கும். எதற்கு எவ்வளவு வரி விதிக்கப்படும், அரசின் கொள்கைகள் என்பதும் அதில் சொல்லப்படும்.
ஆனால், தேர்தல் ஆண்டில் ஆட்சி மாறுவதற்கான வாய்ப்பிருப்பதால், எந்த ஒரு அரசாலும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. அதற்கு பதில், தேர்தல் நடந்து முடியும் வரை, இடைக்காலத்துக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதன்மூலம், தினசரி செலவுக்கான நிதியை பயன்படுத்தவே அரசுக்கு அனுமதி வழங்கப்படும். இது, Vote on Account என சொல்லப்படுகிறது.
பட்ஜெட்டில் மக்களை கவரும் திட்டங்கள் இடம்பெறுமா?
அந்த வகையில், நாளை தாக்கல் செய்யப்பட உள்ள இந்த இடைக்கால பட்ஜெட்டில், கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. அதேநேரம், நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் மட்டும் வெளியாகும்.
தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வாக்காளர்களை கவரும் விதமான பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள், இன்றைய இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா? வருமான வரி செலுத்தும் முறையில் மற்றம் கொண்டு வரப்படுமா? மற்றும் தொழில்முனைவோர்களுக்கு மானியம் மற்றும் நிதியுதவி தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்கான உட்கட்டமைப்பில் பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. துறைசார் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவது, மக்கள் வரி செலுத்துவதை எளிதாக்குவது போன்ற நடவடிக்கைகளும் எதிர்பார்க்கப்படுகிறது.