Karnataka Election: அண்ணாமலை என்ன பெரிய ஹீரோவா..? தேர்தல் தோல்விக்கு காரணம் யார்? முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. விளாசல்..!
ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட வெற்றி பெறாத, நடைமுறை அறிவு இல்லாத தலைவர்கள், சட்டப்பேரவை தேர்தலின் போது, கட்சி தலைவர்களை வழி நடத்தினார்கள் என்று கர்நாடக முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேசியுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த 30 ஆண்டுகளில் எந்த ஒரு கட்சியும் இப்படிப்பட்ட மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்ததில்லை. இச்சூழலில், தேர்தலில் தோல்வி அடைந்துள்ள பாஜகவில் தற்போது உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தில் உள்ளது.
கர்நாடக பாஜகவில் உச்சக்கட்ட உட்கட்சி பூசல்:
முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கோஷ்டிக்கும் பாஜகவின் தேசிய அமைப்பு செயலாளர் பி.எல். சந்தோஷ் கோஷ்டிக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. தேர்தல் தோல்விக்கு எதிர் கோஷ்டிதான் காரணம் என ஒருவரை ஒருவர் பொதுவெளியில் தாக்கி பேசி வருகின்றனர்.
இதில், எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ரேணுகாச்சார்யா சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். குறிப்பாக, கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
சில தலைவர்கள், தங்களின் சர்வாதிகார போக்கை விட்டொழிய வேண்டும் என கூறிய அவர், "ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட வெற்றி பெறாத, நடைமுறை அறிவு இல்லாத தலைவர்கள், சட்டப்பேரவை தேர்தலின் போது, கட்சி தலைவர்களை வழி நடத்தினார்கள்" என குற்றஞ்சாட்டினார்.
அண்ணாமலையை தாக்கி பேசிய எடியூரப்பா ஆதரவாளர்:
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக செயல்பட்ட தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையை குறிப்பிட்டு பேசிய ரேணுகாச்சார்யா, "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எங்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அண்ணாமலை என்ன பெரிய ஹீரோவா? இங்க வந்து போஸ் கொடுக்கிறார். தங்களுக்கு சல்யூட் அடித்த ஒருவரின் ஆலோசனைகளை எடியூரப்பாவும் பசவராஜ் பொம்மையும் கேட்க வேண்டியிருந்தது" என்றார்.
பாஜக தேசிய தலைவர்களை தாக்கி பேசிய அவர், "2021ஆம் ஆண்டு தனது அரசியல் குருவான எடியூரப்பாவை முதலமைச்சர் பதவியில் இருந்து கட்சி நீக்கியது தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம். தேர்தல் தோல்விக்கு மாநில பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
மாநிலத்திலும் மத்தியிலும் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு பாஜக சுயபரிசோதனை செய்து, ஜில்லா பஞ்சாயத்து, தாலுக்கா பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை எதிர்கொள்ள மன உறுதியை உருவாக்க வேண்டும். ஆனால், சிலருக்கு சுயபரிசோதனை செய்யும் திறன் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை" என்றார்.
நோட்டீஸ்:
கட்சி தலைமையை விமர்சித்த காரணத்தால் ரேணுகாச்சார்யாவிடம் விளக்கம் கேட்டு பாஜக ஒழுக்காற்று குழு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பாஜக ஒழுக்காற்று குழு தலைவர் லிங்கராஜ் பாட்டீல் ரேணுகாச்சார்யாவுக்கு எழுதிய கடிதத்தில், "பலமுறை கூறியும், மாநில, தேசிய தலைவர்களுக்கு எதிராக பலமுறை பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்து, கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.