5 மாநில தேர்தல் ஃபார்முலாவை கையில் எடுத்த பாஜக.. அதிர்ச்சியில் நிர்மலா சீதாராமன்.. என்னாச்சு?
மாநிலங்களவையில் பதவி வகித்து வரும் மத்திய அமைச்சர்களும் மக்களவை தேர்தலில் களம் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் பெற்ற வெற்றியை இந்த முறையும் பெற்ற விட வேண்டும் என பாஜக தலைவர்கள் வியூகம் அமைத்து வருகின்றனர்.
பழைய ஃபார்முலாவை கையில் எடுத்த பாஜக:
அந்த வகையில், ஐந்து மாநில தேர்தலில் பின்பற்றிய ஃபார்முலாவை மக்களவை தேர்தலிலும் பின்பற்ற பாஜக முடிவு செய்துள்ளது. அதன்படி, மூத்த தலைவர்களை மக்களவை தேர்தலில் போட்டியிட வைக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. குறிப்பாக, மாநிலங்களவையில் மூன்றாவது முறையாக பதவி வகித்து வருபவர்கள், மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மாநிலங்களவையில் பதவி வகித்து வரும் மத்திய அமைச்சர்களும் மக்களவை தேர்தலில் களம் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "தேசிய தலைவர்களின் தலைமையில் புதன்கிழமை நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதில், 1, 2 பேருக்கு விதிவிலக்கு அளிக்கப்படலாம். ஆனால், மற்ற அனைவருக்கும் இது பொருந்தும். எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை மூத்த தலைவர்களே முடிவு செய்து கொள்ளலாம்" என்றார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 4 மத்திய அமைச்சர்கள் உள்பட 18 எம்பிக்களை கட்சி தலைமை போட்டியிட வைத்தது. அதில். பெரும்பான்மையானோர் வெற்றிபெற்றனர்.
மத்திய அமைச்சர்களுக்கு ஆப்பு:
இதை மேற்கோள் காட்டி பேசிய மூத்த தலைவர் ஒருவர், "இது மிகவும் நல்ல பலனைத் தந்தது. குறைந்தபட்சம் ஒரு மத்திய அமைச்சர் உட்பட இரண்டு முக்கியஸ்தர்கள் டெல்லியில் இருந்து களமிறக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
மத்திய திறன் மேம்பாடு துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளனர்.
மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே உள்ளிட்டோரும் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ராஜீவ் சந்திரசேகர் மற்றும் நிர்மலா சீதாராமன், மகாராஷ்டிராவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கோயல் மற்றும் குஜராத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ரூபாலா ஆகியோரைத் தவிர, மொத்தம் 9 பேர் மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகின்றனர். இந்த பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் அடங்குவார். பாஜக தேசிய தலைவர் நட்டாவும் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.