அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் அத்வானி.. சிலையை பிரதிஷ்டை செய்யப்போவது யார்?
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி பங்கேற்பாரா? மாட்டாரா? என்பதில் சர்ச்சை எழுந்துள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி பங்கேற்பாரா? மாட்டாரா? என்பதில் சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இச்சூழலில், அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் அத்வானி:
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயிலுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, சிறைக்கு சென்ற அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என அறக்கட்டளை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏன் என்றால், அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆதரவு திரட்டுவதற்காக முன்னாள் துணைப் பிரதமரான அத்வானி, குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து உத்தரபிரதேசத்தின் அயோத்தி வரை ரத யாத்திரையை முன்னின்று நடத்தினார். அவருத்து துணையாக நின்றவர் முரளி மனோகர் ஜோஷி. அதுமட்டும் இன்றி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரும் சம்பவ இடத்தில்தான் இருந்தனர்.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கொடுத்த ட்விஸ்ட்:
இப்படி இருக்கையில், அயோத்தி ராமர் கோயில் போராட்டத்தை முன்னின்று நடத்திய இருவரை திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இருவரையும் பாஜக மேலிடம் ஓரங்கட்டியுள்ளதாகவும், அவர்களை அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து, ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் அத்வானி பங்கேற்பார் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறுகையில், "விழாவில் அத்வானி பங்கேற்பார். ஆனால், வயது முதிர்வு காரணமாக அவரால் நிகழ்ச்சி முழுவதிலும் பங்கேற்க முடியாது என நினைக்கிறேன்" என்றார்.
முரளி மனோகர் ஜோஷி குறித்து பேசிய அவர், "பங்கேற்பாரா? மாட்டாரா? என்பது குறித்து அவர் இன்னும் உறுதி செய்யவில்லை. ஆனால், நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் அவர் பாசிட்டிவாக உள்ளார்" என்றார்.