MP Chhattisgarh Election: தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே அதிரடி: சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தை குறி வைக்கும் பாஜக
கட்சியில் உள்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், அதை முன்கூட்டியே தீர்ப்பதற்காக வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
![MP Chhattisgarh Election: தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே அதிரடி: சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தை குறி வைக்கும் பாஜக BJP Names Chhattisgarh Madhya Pradesh Candidates for Election Before poll Dates MP Chhattisgarh Election: தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே அதிரடி: சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தை குறி வைக்கும் பாஜக](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/4287e7bd00fd3e3b0af28058b911e8831692274677553729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் ஏற்கனவே சூடி பிடிக்க தொடங்கியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, இந்தாண்டின் இறுதியில் 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.
சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தை குறி வைக்கும் பாஜக:
அதுமட்டும் இன்றி, கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களிலும், பாஜக வெற்று பெறுவதற்கு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களே காரணம். மேல்குறிப்பிட்ட இந்த மாநிலங்களில், 95 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் பாஜகவே வெற்றிபெற்றது.
எனவே, இந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே, வேட்பாளர் பட்டியை முதல் ஆளாக வெளியிட்டுள்ளது பாஜக.
இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் தேதிகளை அறிவிப்பதற்கு முன்னர், பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது இதுவே முதல்முறை. 90 இடங்களை கொண்ட சத்தீஸ்கருக்கு முதல் கட்டமாக 21 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனது. அதேபோல, 230 சட்டப்பேரவை இடங்களை கொண்ட மத்திய பிரதேசத்திற்கு முதல் கட்டமாக 39 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே வேட்பாளர் பட்டியல் வெளியீடு:
நேற்று, பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். பாஜகவை பொறுத்தவரையில், வேட்பாளர் பட்டியலையும் தேர்தலுக்கான வியூகத்தையும் இறுதி செய்யும் அதிகாரம் மத்திய தேர்தல் கமிட்டிக்கே உள்ளது.
கட்சியில் உள்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், அதை முன்கூட்டியே தீர்ப்பதற்காக வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதுமட்டும் இன்றி, கடந்த மே மாதம் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மோசமான தோல்வியை சந்தித்தது.
எனவே, இனி வரும் தேர்தல்களில் தோல்விகளை தவிர்க்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. மேல்குறிப்பிடப்பட்ட மூன்று மாநிலங்களை தவிர, தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில், மத்தியப் பிரதேசம், மிசோரத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளே ஆட்சி செய்து வருகின்றன.
மிசோரத்தில் கூட பாஜகவின் கூட்டணி கட்சியான மிசோ தேசிய முன்னணியே ஆட்சி செய்து வருகிறது. மணிப்பூர் இன கலவரத்தால், பாஜக, மிசோ தேசிய முன்னணி கட்சிகளுக்கு இடையே சுமூகமான சூழல் நிலவவில்லை. அதேபோல, மத்திய பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் சூழல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)