"பாம்பு கடியால் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் பேர் உயிரிழப்பு" மக்களவையில் பாஜக எம்பி பகீர்!
பாம்பு கடியால் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இதனால் 50,000 பேர் உயிரிழக்கின்றனர் என பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை எம்.பி.க்கள் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி இன்று மக்களவையில் பேசினார்.
அதிகரிக்கும் பாம்பு கடி சம்பவங்கள்: பாம்பு கடியால் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இதனால் 50,000 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ஏழ்மை மற்றும் இயற்கை பேரிடர் இரண்டையும் தாங்கி வாழும் ஏழ்மையான மாநிலம் பீகார்.
இந்தியா முழுவதும் 30 முதல் 40 லட்சம் பேரை பாம்பு கடிக்கிறது. அதில், 50,000 பேர் உயிரிழக்கிறார்கள். இது உலகிலேயே அதிகம். பல இறப்புகளைத் தடுக்க முடியும். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட தாக்கம், பாம்புக்கடி சம்பவங்களை அதிகரிக்கிறது" என்றார்.
பீடி தொழிலாளர்கள் தொழிலாளர்கள் குறித்து பேசிய திமுக எம்.பி. கதிர் ஆனந்த், "பெரும்பாலும் பீடி தொழிலாளர்களாக பெண்களே உள்ளனர். மத்திய அரசின் நிதியுதவி போதுமானதாக இல்லை. அவர்களது ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
பல்வேறு விவகாரங்களை எழுப்பிய தமிழ்நாட்டு எம்.பி.க்கள்: தூசி மற்றும் பிற தொழில்சார் ஆபத்துக்களை எதிர்கொள்வதால் பட்ஜெட் ஒதுக்கீடுகளை கருத்தில் கொண்டு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என்றார்.
மருத்துவ, சுகாதாரம் குறித்து பேசிய கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், "மக்களுக்கு சிறந்த முறையில் உதவுவதற்காக பரிந்துரைகளின் ஒதுக்கீட்டை ஆண்டுக்கு 150 ஆக உயர்த்த வேண்டும். அனைத்து மருத்துவச் செலவுகளும் திட்டத்தின் கீழ் வருகிறதா என்பதை உறுதிசெய்ய, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மறுமதிப்பீடு செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். முழு திறனையும் உணர நாம் ஒன்றாக வேலை செய்வோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய கரூர் எம்.பி. ஜோதிமணி, "வினாத்தாளை வாங்க 25 லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால், காசு உள்ளவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தமிழ்நாட்டில் குறைந்தது 18 மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டனர். எனவே, அதை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்துகிறேன்" என்றார்.