தடுப்பூசி இருக்க வேண்டிய இடத்துல பீர்.. ஆரம்ப சுகாதார மையத்தின் ப்ரீசரில் மதுபானம்.. நடந்தது என்ன?
உ.பி.யில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசியை வைக்க வேண்டிய ப்ரீசரில் பீரை வைத்ததாக அரசு அதிகாரிகள் மீது குற்றசசாட்டு எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் புலந்த்ஷெஹர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குர்ஜா நகரில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசியை வைக்க வேண்டிய ப்ரீசரில் பீரை வைத்ததாக அரசு அதிகாரிகள் மீது குற்றசசாட்டு எழுந்துள்ளது.
"தடுப்பூசி இருக்க வேண்டிய இடத்தில் பீர்" ப்ரீசரில் பீர் வைத்திருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பின. இதையடுத்து, இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி வினய் குமார் சிங் கூறுகையில், "தர்பா பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் தடுப்பூசி ப்ரீசர் பெட்டியில் பீர் கேன்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன.
விதிகளின்படி, தடுப்பூசிகளைத் தவிர வேறு எதையும் ப்ரீசர் பெட்டியில் வைக்க கூடாது. குளிர்சாதன பெட்டியில் பீர் கேன்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வைப்பது சீரியசான விஷயம். பீர் கேன்கள், தண்ணீர் பாட்டில்களை ஃப்ரீசரில் வைத்தது யார் என்பதை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது" என்றார்.
அரசு அதிகாரி மீது அரசு நடவடிக்கை: இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நோய்த்தடுப்பு அதிகார் அறிக்கை சமர்பித்துள்ளார். அதன் அடிப்படையில், ஆரம்ப சுகாதார நிலைய நோய்த்தடுப்பு அதிகாரி ஹரி பிரசாத் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மருத்துவ கட்டமைப்பின் அடித்தளமாக ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. மக்களிடம் மருத்துவ வசதிகளை எடுத்து செல்லும் வகையில் சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், சுகாதார மையத்தின் ப்ரீசர் பெட்டியில் மதுபான வைக்கப்பட்டிருப்பது பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிகார துஷ்பிரயோகத்தில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனரா? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பொதுவாக ஆரம்ப சுகாதார மையத்தில்தான் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும். அப்படிப்பட்ட ப்ரீசரில் தடுப்பூசிகள் வைக்க வேண்டிய இடத்தில் மதுபானங்களையும் தண்ணீர் பாட்டில்களையும் வைத்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.