கெஜ்ரிவாலுக்கு ஸ்கெட்ச் போடும் ED.. ஆம் ஆத்மியை விடாது துரத்தும் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு
மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணைக்காக நவம்பர் 2ஆம் தேதி அன்று நேரில் அஜராகும்படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான்.
ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடி:
குறிப்பாக, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு, ஆம் ஆத்மி கட்சியை மிக பெரிய நெருக்கடியில் தள்ளியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக இருந்த மணிஷ் சிசோடியாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, அவரை காவலில் எடுத்துள்ளது.
சிசோடியாவை தொடர்ந்து, அதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.
கெஜ்ரிவாலுக்கு ஸ்கெட்ச் போடும் ED:
இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணைக்காக நவம்பர் 2ஆம் தேதி அன்று நேரில் அஜராகும்படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், இதே விவகாரத்தில் கெஜ்ரிவாலை விசாரிக்க சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கெஜ்ரிவாலின் பெயர் இடம்பெறவில்லை என்றாலும் சிபிஐ அவரை விசாரணைக்கு அழைத்திருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சௌரப் பரத்வாஜ், "ஆம் ஆத்மி கட்சியை எப்படியும் அழித்துவிட வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கமே மத்திய அரசுக்கு உள்ளது. இதற்காக, பொய் வழக்கை தாக்கல் செய்வது உள்பட அவர்கள் அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலை சிறைக்கு அனுப்பி, ஆம் ஆத்மி கட்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம்" என்றார்.
நேற்று, இந்த வழக்கில் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்க மறுத்த ஒரு சில மணி நேரத்தில் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது பரபரப்பை கிளப்பியது.
மதுபான கொள்கை வழக்கு:
டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுப்பதில் சாராய நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் இதனால், சாராய நிறுவனங்களுக்கு 12 சதவிகிதம் லாபம் கிடைத்திருக்கும் என சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்காக, அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு பொறுப்பு வந்தபிறகு, மதுபான விற்பனை கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது.
இதனால், கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது.