Cabinet Portfolio: துணை முதலமைச்சரானார் பவன் கல்யாண்.. ஆந்திர அமைச்சரவை இலாக்காக்கள் அறிவிப்பு!
புதிதாக பதவியேற்றுள்ள ஆந்திர அரசின் அமைச்சரவை இலாக்கா தொடர்பான விவரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு பஞ்சாயத் ராஜ், சுற்றுச்சூழல் உள்ளிட்டவை ஒதுக்கப்பட்டுள்ளது.
Andhra Pradesh Cabinet Portfolio: சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு நேற்று முன்தினம் பதவியேற்ற நிலையில், அமைச்சரவை இலாக்கா தொடர்பான விவரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆந்திர துணை முதலமைச்சராகிறார் ஜனசேனா கட்சியின் பவன் கல்யாண்.
இவருக்கு பஞ்சாயத் ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் கிராமப்புற நீர் வழங்கல், சுற்றுச்சூழல், வனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர அமைச்சரவை இலாக்கா விவரம்: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு-க்கு பொது நிர்வாகத்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுத்துறை நிறுவனங்கள், மற்றவர்களுக்கு ஒதுக்கப்படாத அனைத்து இலாகாக்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ்-க்கு மனித வள மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், மின்னணு மற்றும் தகவல் தொடர்புதுறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கிஞ்சராபு அச்சன்நாயுடுவுக்கு விவசாயம், கூட்டுறவு, சந்தைப்படுத்தல், கால்நடை பராமரிப்பு, பால்வள மேம்பாடு & மீன்வளம் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது.
சுரங்கங்கள் மற்றும் புவியியல்; கலால் வரி ஆகியவற்றை கொள்ளு ரவீந்திரா கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நாதெண்டல மனோகருக்கு உணவு மற்றும் பொது விநியோகம், நுகர்வோர் விவகாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதித்துறை யாருக்கு? நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவை பொங்குரு நாராயணாவுக்கும் அனிதா வாங்கலபுடிக்கு உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அளிக்கப்பட்டுள்ளது. சத்ய குமார் யாதவுக்கு சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் மருத்துவக் கல்வி ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் நிம்மலா ராமாநாயுடுவுக்கு நீர்வள மேம்பாடு அளிக்கப்பட்டுள்ளது. நஸ்யம் முகமது பாரூக்-க்கு சட்டம் மற்றும் நீதி; சிறுபான்மையினர் நலன் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி; திட்டமிடல்; வணிக வரிகள் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் ஆகியவை பையாவுல கேசவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அனகனி சத்ய பிரசாத்துக்கு வருவாய், பதிவுத்துறை மற்றும் முத்திரைத்தாள் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளது. கொலுசு பார்த்தசாரதிக்கு வீட்டுவசதி, தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கந்துலா துர்கேஷ்-க்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் ஒளிப்புரப்புத்துறையும் கும்மாடி சந்தியா ராணிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், பழங்குடியினர் நலனும் பி.சி. ஜனார்தன் ரெட்டிக்கு சாலைகள் மற்றும் கட்டிடங்கள்; உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த ஆந்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. தெலுங்கு தேசம் கட்சி மட்டும் 135 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளான ஜனசேனா 21 இடங்களையும் பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது.