Hidden Camera: பாத்ரூமில் ரகசிய கேமரா.. பெண்களின் ஆபாச வீடியோக்களை விற்ற மாணவர்.. பொறியியல் கல்லூரியில் பரபரப்பு!
பொறியியல் கல்லூரியின் கழிவறையில் ரகசிய கேமரா(Hidden Camera) வைத்து மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்ததாக மாணவிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் பெண்கள் விடுதியின் கழிவறையில் ரகசிய கேமரா வைத்திருந்ததாகவும், மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்து அதனை கல்லூரி மாணவர் ஒருவர் விற்று வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொறியியல் கல்லூரியில் பரபரப்பு சம்பவம்: பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தாண்டு, கொல்கத்தா சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்துள்ள குட்லவல்லேரு பொறியியல் கல்லூரியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதியின் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்ததாக மாணவிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் நீதி வேண்டி, இரவு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கழிவறையில் ரகசிய கேமராவா? இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஆந்திர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் வெளியிட்ட பதிவில், "ரகசிய கேமரா புகார்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.
குற்றவாளிகள் மற்றும் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் கல்லூரிகளில் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட ரகசிய கேமரா ஒன்றை மாணவிகள் நேற்று மாலை கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று இரவு 7 மணிக்கு போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர் மாணவர்கள். இது, இன்று காலை வரை தொடர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விடுதியைச் சேர்ந்த மூத்த மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அவரது மடிக்கணினி மற்றும் மொபைல் கைப்பற்றப்பட்டது. ஆனால், அந்தரங்க வீடியோக்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இதுகுறித்து கிருஷ்ணா மாவட்ட எஸ்பி கந்தாதர் ராவ் கூறுகையில், "நாங்கள் நடத்திய விசாரணையில் மாணவிகள் விடுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் எதுவும் கிடைக்கவில்லை. சந்தேகமடைந்த மாணவர்களின் மடிக்கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் பிற சாதனங்களை மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் முன்னிலையில் சோதனை செய்தோம். வீடியோக்கள் எதுவும் கிடைக்கவில்லை. மாணவிகள் கவலைப்பட வேண்டாம்" என்றார்.