ABP-CVoter Opinion Poll: மகாராஷ்டிராவில் நெக் அண்ட் நெக்.. உபியில் சொல்லி அடித்த பாஜக.. கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
CVoter Opinion Poll: நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த 2019ஆம் ஆண்டை போன்று, இந்த முறையும் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் தொடரும் 'மோடி சுனாமி'
தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கடைசி கருத்துக்கணிப்பு முடிவுகள் கடந்த 14ஆம் தேதியில் இருந்து வெளியிடப்பட்டு வருகிறது.
ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா கூட்டணி வலுவாக உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாஜக ஆதிக்கம் செலுத்தும் பீகார், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளே இதிலும் எதிரொலித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் 51.1 சதவிகித வாக்குகளை பாஜக கூட்டணி பெறும் என்றும் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 38.1 சதவிகித வாக்குகளை பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடும் போட்டி:
தொகுதிகளை பொறுத்தமட்டில், 73 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் என கூறப்பட்டுள்ளது. 7 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரசேத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் போட்டி கடுமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 44.9 சதவிகித வாக்குகளை பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி 40.9 சதவிகித வாக்குகளை பெறும் என சொல்லப்பட்டுள்ளது.
பாஜக - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் - உத்தவ் தாக்கரே சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி 18 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
நவீன் பட்நாயக்கின் கோட்டையாக கருதப்படும் ஒடிசாவில் இந்த முறை பாஜக அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்றும் என சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, 40.9 சதவிகித வாக்குகளை பெற்று பாஜக 13 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் ஆளுங்கட்சியாக உள்ள பிஜு ஜனதா தளம் 35.6 சதவிகித வாக்குகளை பெற்றும் 7 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. 17.1 சதவிகித வாக்குகளை பெற்று காங்கிரஸ் 1 இடத்தில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.