மேலும் அறிய
Advertisement
வீடுகளின்றி தவித்த நரிக்குறவர்களுக்கு விரைவில் வீடு - தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் உறுதி
''தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் படி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர் இதை தொடர்ந்து உள்ள பெண்குழந்தைக்கு முருக வள்ளி என பெயர் வைத்தார்''
தூத்துக்குடி மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் அருகே நரிக்குறவர்கள் சமுதாயத்தினர் 50 குடும்பங்களை சேர்ந்த 250 பேர் கடந்த 20 ஆண்டு காலமாக தற்காலிக கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். முதலில் தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது மாற்றப்பட்ட இச்சமுதாயத்தினர் தற்போது புதியபேருந்து நிலையம் பகுதியில் வசித்து வருகின்றனர். தூத்துக்குடி பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வீடு அமைத்துத்தர வேண்டுமென கோரிக்கைகளை வைத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் ரவிகுமார் நரிக்குறவர்களுக்கு வசவப்புரம் கிராமத்திற்கு உட்பட்ட அனவரதநல்லூர் அருகே பரம்புவில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 18 குடும்பத்தினருக்கு முதற்கட்டமான வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இதனை அடுத்து நரிக்குறவர்களுக்கு விரைவில் பசுமை வீடுகள் அல்லது இந்திரா காந்தி நினைவு திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார். முதலில் நரிக்குறவர்கள் அப்பகுதியில் தற்காலிக கூடாரம் அமைத்து இருந்தால் மட்டுமே இருப்பிட சான்று உள்ளிட்டவைகள் வழங்கமுடியும் என தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து நரிக்குறவர்கள் அப்பகுதிக்கு சென்று தற்காலிக கூடாரம் அமைக்க முற்பட்டபோது முற்றிலும் பரம்பு பகுதியாக இருந்ததால் கூடாரம் அமைக்க இயலவில்லை தங்களுக்கு பரம்பு பகுதியை சீரமைத்துதரவும் குடியிருப்புகளை அமைத்துத்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்நிலையில் பரம்பு பகுதியில் தங்களுக்கு வழங்கப்படும் வீட்டுமனையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையை அடுத்து மீண்டும் புதிய பேருந்து நிலையம் அருகே தங்களது கூடாரங்களை அமைத்து வாழ்வாதாரத்தை துவங்கினர். மழையோ பனியோ புயலோ தங்களது குழந்தை குட்டிகளுடன் புதிய பேருந்து நிலையத்தில் ஊசி, பாசி, மணிமாலை உள்ளிட்டவைகளை விற்று வாழ்வாதாரம் மேற்கொண்டனர்.
தற்போது புதிய பேருந்து நிலையம் அருகே வசித்து வரும் இவர்களுக்கு தற்போது பெய்துவரும் மழையின் காரணமாக கூடாரத்திற்குள் இருக்க முடியவில்லை இதனால் பேருந்து நிலையத்தில் படுக்க வேண்டிய சூழல் உள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் மற்றும் அமைச்சரை சந்தித்து கோரிக்கை அளித்து இருந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து அவர்கள் அணிவித்த பாசிமாலையை அன்புடன் ஏற்றுகொண்ட அவர், அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேசன் கார்டு உள்ளிட்டவைகள் உடனே வழங்கவும், தூத்துக்குடி அருகில் விரைவில் நிலம் வழங்கி பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த அவருக்கு நரிக்குறவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இது தொடர்பாக நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மாவீரன் நம்மிடம் கூறும்போது, 30 ஆண்டு காலமாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும் எவ்வித அடையாளமும் இல்லாமல் வசிப்பதாக கூறுகின்றனர். மழை காலத்தில் பேருந்து நிலையத்தில் தங்கும்போது பல்வேறு இன்னல்களை அளிப்பதாகவும், மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை போடுவதாக அதிகாரிகள் கண்டிப்பதாகவும் தெரிவித்தார். தற்போது மாவட்ட ஆட்சியருக்கும் அமைச்சருக்கும் தங்களது குறைகளை தெரிவித்து உள்ளதாகவும் , தற்போது மாவட்ட நிர்வாகம் ஆதார் அட்டை எடுக்க சொல்லி உள்ளதாகவும் நல்லது நடக்கும் என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த சாந்தி என்பவர் கூறும்போது, மாலை கோர்த்து விற்கும் எங்களுக்கு கடைகளுக்கு சென்று விற்க தெரியாது, பஸ் ஸாண்டாடில் உக்கார்ந்து விற்போம் அது தான் எங்களது வாழ்வாதாரம் என்கிறார். இதனை தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அவர்களது வாழ்வாதாராம் பாதிக்காத வகையில் தூத்துக்குடியில் இருந்து பத்து பதினைந்து நிமிட பேருந்து பயணம் செய்து வரக்கூடிய பகுதியில் உரிய நிலம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் படி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர் இதை தொடர்ந்து உள்ள பெண்குழந்தைக்கு முருக வள்ளி என பெயர் வைத்தார். நரிக்குறவர் சேர்ந்தவர்கள் ஆரவாரம் செய்தனர் தங்களின் கோரிக்கையை கேட்டு உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் தமிழக முதல்வருக்கும் நரிக்குறவர்கள் நன்றி தெரிவித்தனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion