”பயனாளர்களை உளவு பார்க்கிறதா கூகுள்?” – ஆப்பிள் ஒப்பந்தத்தால் வெளிவந்த ரகசியம்!
அமெசான் கிண்டில் வாங்க வேண்டும் எனக் குறுஞ்செய்தி வழியாக உங்கள் நண்பரிடம் நீங்கள் உரையாடிக் கொண்டிருந்தீர்களானால் உங்களது கூகுள் பக்கத்தில் கிண்டில் விளம்பரம் திடீரென வருவது தற்செயல் அல்ல!
இந்திய கூகுள் பயனாளிகளுக்கு டக்டக்கோ தேடல் தளம் (Search Engine) குறித்துத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 2008ல் வெயின்பெர்க் என்கிற தனிநபரால் துவங்கப்பட்ட இந்தத் தளம் முழுக்க முழுக்க கூகுளுக்கு எதிராகத் தொடங்கப்பட்டது. அவர்களது முதல் விளம்பரமே கூகுளின் விளம்பரத்தைச் சுட்டிக்காட்டிதான் உருவானது. மேலும் கூகுளைப் போல டக்டக்கோ தளத்தில் நாம் தேடியவை தொடர்பான வரலாறு (Search History) எதுவும் இருக்காது. முழுக்க முழுக்க விளம்பரதாரர்கள் உதவியுடன் இயங்கும் டக்டக்கோ-வில் நமக்கு விருப்பம் இல்லையென்றால் அந்த விளம்பரங்கள் வராமல் தடுப்பதற்குமான வசதியும் இருக்கிறது. டக்டக்கோ பற்றித் தற்போது எதற்கு என்கிறீர்களா? அண்மையில் கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரதான ஆப் வெளியிட்ட பயனாளர் தனியுரிமை அத்துமீறல்கள் தொடர்பான ஆவணம்தான் அதற்குக் காரணம்.
டக்டக்கோ நிறுவனம் இதைச் சுட்டிக்காட்டி கூகுள் தளம் பயனாளர்களை உளவு பார்ப்பதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது, “தேடல் தளத்தை விரிவுபடுத்துவதற்கு பயனாளர்களின் தகவல்களைத் திருடவேண்டும் என்கிற அவசியமே இல்லை. தகவல்களைத் திருடாமலேயே நாம் வளரலாம் என்பதற்கு எங்கள் டக்டக்கோ நிறுவனம் ஒரு உதாரணம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.
After months of stalling, Google finally revealed how much personal data they collect in Chrome and the Google app. No wonder they wanted to hide it.
— DuckDuckGo (@DuckDuckGo) March 15, 2021
⁰
Spying on users has nothing to do with building a great web browser or search engine. We would know (our app is both in one). pic.twitter.com/lJBbLTjMuu
எப்படி உருவானது இந்தப் பிரச்னை?
ஆப்பிள் நிறுவனம் தனது பயனாளர் தனியுரிமைப் பகுதியில் ஆப்பிள் பயன்பாட்டாளரின் டேட்டா பாதுகாப்பு தொடர்பான பகுதியில் சில புதிய பாதுகாப்பு அம்சங்களைக் கடந்த டிசம்பரில் சேர்த்திருந்தது. பயனாளரிடமிருந்து சேகரிக்கப்படும் தகவல்கள் எதற்கெல்லாம் உபயோகப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளும் முழு உரிமை பயனாளருக்கு இருக்கிறது அதன்படி தங்களது ஆப்பிள் அலைபேசிகளில் உபயோகிக்கப்படும் பிராடக்ட்கள் இந்தத் தகவல் சேகரிப்பு குறித்து வெளிப்படைத்தன்மையுடன் அறிவிக்கவேண்டும் என்கிற அப்டேட்தான் அது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் ஆப்பிள் பேசிகளில் உபயோகிக்கப்படும் மற்ற பிராடக்ட்கள் கையெழுத்திட்ட நிலையில் கூகுள் மட்டும் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வந்தது. மேலும் அந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டது தொடங்கியே கூகுளும் ஆப்பிள் ஐ.ஓ.எஸ்ஸுக்கான தனது அப்ளிகேஷன்களில் எவ்வித புதுப்பிப்பும் செய்யாமல் இருந்துவந்தது. கூகுளுக்கும் ஆப்பிளுக்கும் இருந்த கருத்து முரண்பாடு இதன்வழியாக வெளிப்படையாகவே தெரியவந்தது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 2021ல் பயனாளர்கள் குறித்த தகவல்சேகரிப்பு வெளிப்படைத்தன்மை (User data collection transparency)தொடர்பான ஒப்பந்தத்தில் ஆப்பிள் நிறுவனத்துடன் இறுதியாக கூகுள் கையெழுத்திட்டது. அதன்படி ஐ.ஓ.எஸ் தளத்தில் கூகுள் தனது பிரதான தளத்தின் பயனாளரின் தனியுரிமை (User’s privacy) பகுதியைப் இந்த மாதம் புதுப்பித்துள்ளது. அது தொடர்பாகக் கிடைத்த ஸ்கீரீன்ஷாட்களில் பயனாளர் குறித்த எந்தெந்த தகவல்களையெல்லாம் கூகுள் எடுக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரியவந்திருக்கிறது.
உதாரணத்துக்கு, மூன்றாம் நபர் விளம்பரத்துக்காக (Third party advertisements) பயனாளர் இருக்கும் இடம், அவரது தேடல் வரலாறு, வலைப்பக்கங்களின் வரலாறு, பயன்பாட்டுத் தரவுகள் உள்ளிட்டவற்றை கூகுள் சேகரிக்கிறது என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் பயனாளரின் மொபைலில் இருக்கும் புகைப்படங்கள் ஆடியோக்கள் தொடங்கி நாம் கூகுள் அல்லாத தளத்தில் பரிமாறிக்கொள்ளும் தகவல்கள் வரை சேகரிப்பது உள்ளிட்டவை கூகுள் வெளியிட்டிருக்கும் இந்த அப்டேட்டின் வழி தெரியவருகிறது.
அதாவது அமெசான் கிண்டில் வாங்க வேண்டும் எனக் குறுஞ்செய்தி வழியாக உங்கள் நண்பரிடம் நீங்கள் உரையாடிக் கொண்டிருந்தீர்களானால் உங்களது கூகுள் பக்கத்தில் கிண்டில் விளம்பரம் திடீரென வருவது தற்செயல் அல்ல!
வாட்சப்பும், ஃபேஸ்புக்கும் இதே போன்ற தகவல் சேகரிப்புச் சர்ச்சைகளில் தொடர்ச்சியாகச் சிக்கி வந்த நிலையில் சைபர் உலகின் பேரரசாகக் கருதப்படும் கூகுளும் இந்தச் சர்ச்சையில் சிக்கியிருப்பது ஒட்டுமொத்த சர்வதேச சைபர் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.