தூத்துக்குடியில் பீக் ஹவர்சில் அதிக லோடுகளுடன் அத்துமீறும் கனரக வாகனங்கள் - போக்குவரத்து போலீசார் நடவடிக்கை தேவை
தூத்துக்குடி நகருக்குள் நெருக்கம் மிகுந்த நேரத்தில் கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் பிற்பகல் 4 முதல் இரவு 8 வரையிலும் நகர் பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை.
தூத்துக்குடி நகராட்சியை மாநகராட்சியாக அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கி வைத்தார். துவக்கி வைத்து 15 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4 இலட்சமாக இருந்து உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியை வடக்கு, தெற்கு என பிரிக்கும் வகையில் தூத்துக்குடியில் அமைந்துள்ள பக்கள் ஓடை நகரை நடுவில் அமைந்து உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியின் எல்லையில் இருந்து சில மீட்டர் தூரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்து உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி எல்லையில் இருந்து துவங்கும் சாலையில் தான் அரசு மருத்துவக்கல்லூரி, பாலிடெக்னிக், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நீதிமன்றம், தென்பாகம் காவல் நிலையம், மாநகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம், மத்திய பாகம் காவல் நிலையமென அனைத்தும் ஒரே சாலையில் அமைந்து உள்ளது. இதனை தொடர்ந்து கடற்கரை சாலையில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் என அமைந்து உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியாக இருந்தாலும் கூட குறுகலான சாலைகளால் போக்குவரத்து பிரச்சினை பிரதான தலைவலியாக உள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தென்பாகம், மத்தியபாகம், வடபாகம், சிப்காட், முத்தையாபுரம், தெர்மல்நகர், போக்குவரத்து காவல்துறை, அனைத்து மகளிர் காவல் நிலையம், குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் உள்ளது. இவை அனைத்தும் துணை காவல்துறை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை ஒரு போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் என மொத்தம் 48 காவலர்கள் இருப்பதாக காவல்துறை தெரிவிக்கின்றது. தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் 33 ஆயிரத்து 414 கார்களும், 42 ஆயிரத்து 317 இருச்சக்கர வாகனங்களும் உள்ளதாக வட்டார போக்குவரத்து கழகத்தில் தகவல் தெரிவிக்கின்றது. இதிலும் மாநகராட்சியின் சில பகுதிகள் ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு உட்பட்டு உள்ளதால் வாகனங்களின் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும்.
தூத்துக்குடி மாநகரில் 31 பள்ளிகள் உள்ளன. அதில் 10 பள்ளிகள் மாநகராட்சியின் கீழ் இயங்குகின்றன. 31 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மேலும் கல்லூரிகள், தொழில் பயிற்சி பள்ளிகள், பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி, செவிலியர் பயிற்சி பள்ளி என அனைத்து மாநகராட்சி பகுதிகளுக்குள்ளேயே செயல்பட்டு வருகின்றது. தூத்துக்குடி மாநகராட்சியில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் நகரின் தெற்கு பகுதியிலேயே அமைந்து உள்ளது. வட பகுதியில் கல்வி நிறுவனங்கள் இருந்தாலும் கூட தென்பகுதியில் தான் அதிகளவில் பள்ளிகள், கல்லூரிகள் அமைந்து உள்ளது.
தூத்துக்குடி நகருக்குள் நெருக்கம் மிகுந்த நேரத்தில் கனரக வாகனங்கள் வர அனுமதி இல்லை என போர்டு வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் பிற்பகல் 4 முதல் இரவு 8 வரையிலும் கனரக வாகனங்கள் நகர் பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை காவல்துறை சார்பில் வைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் கூட இதை எல்லாம் கண்டு கொள்வதில்லை கனரக வாகனங்கள். காலையில் பள்ளி மற்றும் கல்லூரி செல்வதற்காக இருச்சக்கர வாகனங்களில் நகரின் தென் மற்றும் வட பகுதிகளுக்கு மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.
குறிப்பாக பள்ளி செல்லும் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி போக்குவரதுக்கு இடையூறை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உயரமான சரக்கு பொதிகளை ஏற்றி வருவதால் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் அச்சத்துடனே சென்று வரும் நிலை உள்ளதாக கூறும் பொதுமக்கள், பீக் அவர்சில் ஏன் நடுரோட்டில் வாகனங்களை நிறுத்துவதாக கேட்டால் கனரக வாகனத்தில் இருப்பவர்கள் மிரட்டும் தொணியில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
மாநகர போக்குவரத்து காவல்துறையின் அறிவிப்பு பலகையில் குறிப்பிட்டது போல் அல்லாமல் உள்ளூர் வணிக வளாகங்களுக்கு சரக்குகளை ஏற்றி இறக்கி செல்லும் வாகனங்கள் நகரின் பல பகுதிகளிலும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சென்று வரும் சாலையில் வாகனங்களை நிறுத்துவதும் பின்பு செல்வதும் வாடிக்கையாகி விட்டதாக கூறுகின்றனர் பொதுமக்கள்.
இதுகுறித்து முன்னாள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளராகவும் தற்போது விவசாய தொழிலாளர் அணியின் தலைவராக இருக்கும் முத்துவிடம் கேட்டபோது, தூத்துக்குடி தொழில் நகரம் என்றாலும் விரிவடையாத நகரம், ஆட்சியர் அலுவலகம் துவங்கி கடற்கரை சாலை வரை அரசு அலுவலகம், கோர்ட், ஆஸ்பத்திரி, போலீஸ் ஸ்டேசன், கல்லூரி, பள்ளி என அதிகம் உள்ளது. உள்ளூர் சண்டிங லாரிகள் காலைல 8 முதல் 11 வரையிலும் மாலை 4 முதல் 9 வரை வரக்கூடாது என எப்போவோ அறிவித்த அறிவிப்பானை இருந்தாலும் கூட கண்டு கொள்வதில்லை லாரிக்காரர்கள், இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு, அசம்பாவிதம் நடப்பதற்கு முன் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்கிறார்.