’திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும்’ - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ..
தமிழகத்தில் திட்டமிட்டப்படி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திட்டமிட்டபடி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், தேர்தல் தள்ளிப்போகுமா என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும். கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறையுடன் தொடர்ச்சியாக தொடர்புகொண்டு வருகிறோம்.
காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள், ”கடைசி ஒருமணி நேரத்தில் கவச உடையுடன் வந்து வாக்களிக்கலாம். நிலையான பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்குமாறு அரசியல் கட்சியினரையும், மக்களையும் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.
மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட 1.49 லட்சம் பேர் தபால் வாக்கைச் செலுத்துவதற்காக மனு அளித்திருப்பதாகவும், தமிழகத்தில் இதுவரை ரூ.231 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்க நகைகள் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.