இதெல்லாம் உங்கள் வேலைதான்...! மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஆட்சியர் கூறிய அறிவுரை
மேலாண்மை குழுக்கள் அமைக்கும் பணி முதல் கட்டமாக 407 அரசு தொடக்கப் பள்ளிகளில் நேற்று துவங்கியது.
தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கும் பணி முதல் கட்டமாக 407 அரசு தொடக்கப் பள்ளிகளில் நேற்று துவங்கியது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் உள்ள பள்ளிகள் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 - ன் படி பள்ளி மேலாண்மை குழு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளியின் தரம், ஆசிரியர்களின் வருகை, கற்பித்தல் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதில் இக்குழு கவனம் செலுத்தும். மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு, சீருடை, பாடநூல் உள்ளிட்ட அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதை உறுதி செய்து சமுதாயத்துக்கும் பள்ளிக்கும் தொடர்பு ஊடகமாக இருப்பது.
மாற்றுத்திறனாளிகள் குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்கள் கல்வியை தொடரும் வகையிலான வசதிகள் மற்றும் பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை குழுவின் நோக்கங்கள் ஆகும்.
இக்குழுவின் தலைவராக பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையின் பெற்றோர் இருப்பார். இதில் பெற்றோர் ஆசிரியர் உள்ளாட்சி பிரதிநிதிகள் என மொத்தம் 20 உறுப்பினர்கள் இருப்பார்கள். மொத்தமுள்ள உறுப்பினர்களில் 50% குறையாத எண்ணிக்கையில் பெண்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இக்குழு அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி என 1381 அரசு பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க நான்கு கட்டமாக போட்டிகள் மூலம் தேர்வு நடக்கிறது. முதற்கட்டமாக நேற்று தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மூலம் 407 அரசு தொடக்கப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுவிற்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு முகாம் நடந்தது.
தர்மபுரி ஒன்றியம் அதக பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாந்தி கலந்து கொண்டு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சாந்தி பேசியதாவது
பள்ளியின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் பள்ளி மேலாண்மை குழுவினர் சிறப்பாக செயலாற்ற வேண்டும். பள்ளி மாணவர்கள் இடைநீற்றலை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் அவர்களின் கற்றல் திறன் குறித்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் ஆசிரியர்களின் வருகை சீராக உள்ளதா? என்பதை கண்காணிக்க வேண்டும். அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022 ஆம் ஆண்டு முதல் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறு கட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முதல் கட்டமாக 50 சதவீத அரசு தொடக்கப் பள்ளிகளில் அதாவது 407 தொடக்கப்பள்ளிகளில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 44 தொடக்கப்பள்ளிகளில் வரும் 17-ஆம் தேதி 220 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 24ஆம் தேதியும், 317 நடுநிலைப் பள்ளிகளில் 31ஆம் தேதி பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்வுகள் நடைபெறும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு பள்ளிக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள் இந்த கூட்டங்களில் பங்கேற்பார்கள் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் தொடக்கக்கல்வி மான்விழி, மகளிர் திட்ட இணை இயக்குனர் முகமது நசீர், ஒருங்கிணைந்த பள்ளிகள் கல்வி உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.