பாலியல் வழக்கில் கைதான சிவராமன் ‘வக்கீல்னு சொல்லி எங்களையும் ஏமாத்திட்டாங்க’
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான போலி என்சிசி பயிற்சியாளர் வழக்கறிஞர் எனக் கூறி ரூ.36 லட்சம் மோசடி.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைதான போலி பயிற்சியாளர் வழக்கறிஞர் எனக் கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 13 மாணவிகள் பாலியல் ரீதியாக தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர். என்சிசி முகாம் நடத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவேரிப்பட்டினம் காந்தி நகர் காலனியை சேர்ந்த சிவராமன் (35) என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிவராமன் நாம் தமிழர் கட்சி நிர்வாகி. அவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்ததும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மறைக்க முயற்சி செய்த பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் உட்பட மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சிவராமன் தன்னை வழக்கறிஞர் என கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.
வழக்கறிஞர் என சொல்லி ரூ.36 லட்சத்து 20 ஆயிரம் ஏமாற்றிய சிவராமன்
கிருஷ்ணகிரி அடுத்த கொண்டை பள்ளி கிராமத்தை சேர்ந்த சக்திவேல், மோகன், சாந்தி, நாராயணன், மஞ்சுளா, கோவிந்தசாமி மற்றும் சந்திரா ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெத்தால பள்ளி கிராமத்தில் எங்களுக்கு பாதிக்கப்பட்ட சொத்தை வேறு ஒருவர் போலியாக கிரயம் பத்திரம் தயார் செய்து சுவாதீனத்தில் வைத்துள்ளார். அந்த சொத்தை மீட்டு தருவதாகவும் தான் ஒரு வழக்கறிஞர் எனவும் சிவராமன் எங்களிடம் அறிமுகமானார் பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு என போலியான நீதிமன்ற ஆணையை எங்களிடம் காண்பித்து நீதிமன்ற வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறினார்.
அதன்படி சக்திவேலிடம் 4,25,000, மோகன் என்பவரிடம் 4,25,000, சாந்தி என்பவரிடம் 8,50,000, நாராயணன் என்பவரிடம் 8,50,000, கோவிந்தசாமி என்பவரிடம் 8,50,000 மற்றும் வழக்கறிஞர் கட்டணமாக 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 36 லட்சத்து 20 ஆயிரம் சிவராமன் போலியான வங்கி ரசிதையும் எங்களிடம் காண்பித்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளி மாணவியை பாலியல் கொடுமை செய்த சம்பவத்தில் சிவராமன் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் அவர் போலியாக என்சிசி முகாம் நடத்தியதும் போலியாக தன்னை வழக்கறிஞர் என காட்டிக்கொண்டதும் எங்களுக்கு தெரியவந்தது.
ஆகவே வழக்கறிஞர் எனக் கூறிய எங்களை ஏமாற்றிய சிவராமன் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணம் 36 லட்சத்து 20 ஆயிரத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு வழங்கிய சில்ட் மெடல்கள்
சமாதானம் செய்ய முயன்ற பள்ளி முதல்வர்
போலி என்சிசி பயிற்சியாளர் சிவராம கடந்த எட்டாம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி முதலில் தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடன் இருக்கும் சக மாணவிகளிடம் கூறினார்.
பின்னர் அந்த மாணவிகளுடன் சேர்ந்து பள்ளி முதல்வர் சதீஷ்குமார் இடம் நடந்த சம்பவத்தை கூறினார். அவர் இந்த விஷயத்தை பெரிது படுத்தாதீங்க வீட்டில் யாருக்கும் சொல்லாதீங்க பெற்றோர் கஷ்டப்படுவாங்க எனக் கூறியுள்ளார்.
அதன் பிறகு ஆடிட்டோரியத்தில் பரிசளிப்பு விழா நடத்து உள்ளது. அந்த விழாவில் பள்ளி முதல்வர் சதீஷ்குமார் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கேடயங்கள், மெடல்கள் கொடுத்து மீண்டும் அந்த விஷயத்தை பெரிது படுத்தாதீங்க எனக் கூறியுள்ளார். மாணவியை சமாதானப்படுத்திய முதல்வர் மேற்கண்ட முயற்சி பற்றி போலீசாரின் விசாரணையில் தெரிந்துள்ளது.
மண்டல என்சிசி அலுவலர் என ஏமாற்றிய சக்திவேல்
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா கொள்ளுப்பட்டி சேர்ந்தவர் சக்திவேல் 39 என்பவர் கைதாகி உள்ளார். சிவராமன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு என்சிசி மண்டல மேலாளராக சென்றுள்ளார். அவர் தன்னை சேலம் மண்டல தேசிய மாணவர் படை பிரிவு அலுவலர் எனக் கூறி ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சக்திவேல் காரிமங்கலம் ஒன்றிய நாம் தமிழ ர் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார் இந்த சம்பவத்திற்கு பிறகு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.