பியூட்டி பார்லர் ஓனர் முதல் கோவை மேயர் கனவு வரை - யார் இந்த மீனா ஜெயக்குமார் ?
திடீர் பிரபலம், மேயர் கனவு, வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே வாக்கு சேகரிப்பு, அமைச்சர் முன்னிலையில் கொந்தளிப்பு, திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது குற்றச்சாட்டு என சர்ச்சைக்கு பெயர் பெற்றவர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, கோவை மாநகராட்சி மேயர் கனவுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த திமுக மகளிரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். திடீர் பிரபலம், மேயர் கனவு, வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே வாக்கு சேகரிப்பு, அமைச்சர் முன்னிலையில் கொந்தளிப்பு, திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது குற்றச்சாட்டு என சர்ச்சைக்கு பெயர் பெற்றவராகவே மீனா ஜெயக்குமார் கட்சியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மீனா ஜெயக்குமார். அப்பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். திமுக மகளிரணி துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு, கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் மீனா ஜெயக்குமார் என அவரது பெயர் பரவலாக பேசப்பட்டது. அமைச்சர் எ.வ.வேலுவிற்கு நெருக்கமானவர் எனக் கூறப்படும் மீனா ஜெயக்குமாருக்கு, திடீரென மேயர் வேட்பாளர் என கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதன் மூலம் தான் கட்சியினர் இடையேயும் அவர் பரவலாக அறியப்பட்டார். இந்த திடீர் முக்கியத்துவம் கட்சியினர் இடையேயும் புகைச்சலை ஏற்படுத்தியது.
இருப்பினும் கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெறும் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் தவறாது மீனா ஜெயக்குமார் பங்கேற்று வந்தார். திமுகவினர் மீனா ஜெயக்குமாரை மேயர் வேட்பாளராக கருதி உரிய மரியாதை அளித்து வந்தனர். இதனிடையே நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, மீனா ஜெயக்குமார் கோவை மாநகராட்சி 57 வது வார்டில் போட்டியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், திமுக வேட்பாளர் பட்டியல் வரும் முன்னரே அப்பகுதியில் அப்பகுதியில் தேர்தல் அலுவலகம் திறந்ததோடு, மீனா ஜெயக்குமார் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். ஆனால் திமுக வெளியிட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலில் மீனா ஜெயக்குமார் பெயர் இடம்பெறவில்லை. மேயர் வேட்பாளராக அறியப்பட்டவருக்கு போட்டியிட கூட வாய்ப்பு மறுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதியன்று காளப்பட்டி பகுதியில் நடந்த திமுக செயற்குழுவில் பங்கேற்ற மீனா ஜெயக்குமார், தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காத ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில், திமுக கோவை கிழக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் என் வெற்றியை தடுத்தார் என பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசினார். மீனா ஜெயக்குமார் பேசுகையில், ”தன்மானத்தை உரசி பார்க்கும்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும். எனக்கும், மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக்கும் பெரிதாக பிரச்னை இல்லை. ஒரு இட தகராறில் தொடங்கியது. மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் என் வெற்றியை தடுத்த முதல் ஆள். சமூகவலைதளம், ஊடகங்கள் மூலம் என்னைப்பற்றிய தவறான தகவல்களை பரப்பினார்கள். தீண்டத்தகாதவர்களை போல நடத்தினார். நான் பட்டியல் இனத்தை சேர்ந்தவள் என்றெல்லாம் கூறினார். நானும் ஒரு பெண் தான். எனக்கும் வலிக்கும். எல்லோரும் மனிதர்கள் தான். உன் பொண்டாட்டிக்கு சீட் வேணும்னா நீ தாரளமாக கேட்டிருக்கலாம். அதற்காக எனக்கு வாய்ப்பை மறுப்பதா? என் வளர்ச்சியை தடுக்க இந்த ஆள் யாரு?" என்று கொந்தளித்தார்.
ஒரு கட்டத்தில் மீனா ஜெயக்குமார் ஒருமையில் பேச கார்த்திக்கின் ஆதரவாளர்கள் மீனா ஜெயக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டு சாமாதானப்படுத்தி அமர வைத்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் வெடித்த உட்கட்சி பூசல் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மீனா ஜெயக்குமாரின் இந்த குற்றச்சாட்டினால் கோவை திமுக கிழக்கு மாநகர மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்விக்கு, கோவை மாநகராட்சி மேயர் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுக மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சி கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் தெரிவித்தார். மீனா ஜெயக்குமார் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு இருப்பது, நா.கார்த்திக் தரப்பினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.