கோவையை கொந்தளிக்க வைத்த ‛மே’ கொரோனா; ஓராண்டை ஓவர்டேக் செய்த ஒரு மாத பாதிப்பு!
கோவையில் மே மாதத்தில் மட்டும் 90 ஆயிரத்து 566 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஒராண்டில் ஏற்பட்ட பாதிப்புகளை விட அதிகம் என்பது தான் அதிர்ச்சியானது.
கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பில் கோவை முதலிடத்தில் நீடிக்கிறது. இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நகரப் பகுதிகளில் அதிகளவில் இருந்த கொரோனா தொற்றுப் பரவல், கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களுக்கும் பரவத் துவங்கியுள்ளது.
கோவை மாவட்ட நிர்வாகம் நாள்தோறும் கொரோனா தொற்று தினசரி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதன்படி நேற்று ஒரே நாளில் 3,488 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 70 ஆயிரத்து 158 பேராக அதிகரித்த்துள்ளது. நேற்று 39 பேர் உயிரிழந்ததால், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1275 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கையை விட தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது. நேற்று 3308 பேர் குணமடைந்துள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் 39 ஆயிரத்து 149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 993 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாநகராட்சி பகுதி கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த 7 நாட்களில் மாநகராட்சி பகுதிகளில் தொற்று பாதித்தவர்களின் சதவீதம் 56.42 சதவீதமாக உள்ளது. சூலூர் பகுதி 8.52 சதவீதம், துடியலூர் பகுதி 7.45 சதவீதம், மதுக்கரை 5.20 சதவீதம், தொண்டாமுத்தூர் பகுதி 4.57 சதவீதமாக உள்ளது. நகரப்பகுதிகளை காட்டிலும், புறநகர் பகுதிகளில் தொற்று பாதிப்பு சதவீதம் குறைவாக இருந்து வருகிறது.
மே ஒன்றாம் தேதி நிலவரப்படி கோவை மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 79 ஆயிரத்து 592 ஆக இருந்தது. நேற்றைய நிலவரப்படி ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 158 பேராக உயர்ந்துள்ளது. மே மாதத்தில் மட்டும் மாதத்தில் 90 ஆயிரத்து 566 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒராண்டில் ஏற்பட்ட பாதிப்புகளை விட, மே மாதத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம். இதேபோல மே ஒன்றாம் தேதி 723 ஆக இருந்த உயிரிழப்பு, நேற்று 1275 ஆக உயர்ந்துள்ளது. ஒரே மாதத்தில் 552 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து உச்சத்தை தொட்டு வந்த கோவையின் கொரோனா தொற்று பாதிப்புகள், கடந்த சில நாட்களாக குறையத் துவங்கியுள்ளன. கடந்த 25 ம் தேதி 3632 ஆக இருந்த தினசரி பாதிப்பு, 26 ம் தேதி 4268 ஆக உயர்ந்தது. 27 ம் தேதி இதுவரை இல்லாத வகையில் உச்ச பாதிப்பாக 4734 ஆக பதிவானது. அதன் பிறகு தொற்று பாதிப்புகள் குறையத் துவங்கியுள்ளது. 28 ம் தேதி 3992 ஆகவும், 29 ம் தேதி 3692 ஆகவும், 30 ம் தேதி 3537 ஆகவும் குறைந்துள்ளது. இருப்பினும் தினசரி தொற்றுப் பாதிப்புகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது.
கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறுகையில், “சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்றாளர்கள் உள்ள பகுதியாக கோவை உள்ளது. தொற்று பாதிப்புகள் அதிகரிக்கும் போது போதியளவு தொற்று தடுப்புப் பணிகள் நடைபெறவில்லை. குறைவான தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. நெருக்கடியான காலகட்டத்தில் தேவையான அளவு வேகமாக அரசு செயல்படவில்லை. தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து எழுத்தாளர் இரா.முருகவேல் கூறுகையில், “தொற்று பாதிப்புகள் அதிகரிப்பதை வைத்து கோவையை திமுக அரசு புறக்கணிக்கப்படுவதாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இது தவறானது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ஒரு பெரிய தொழில் மண்டலத்தை ஒரு அரசு நாசமாக விடவே விடாது. அதிமுக எம்.எல்.ஏ. க்கள் முடங்கிப் போக, திமுக பிரதிநிதிகள் இல்லாத நிலையில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு விட்டது. பொறுப்பெடுத்துச் செய்யும் அதிகாரிகளும் இல்லை. திமுக அரசு இரண்டு அமைச்சர்களை அனுப்பியும் உடனடி மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டால் கொரோனா தொற்று பாதிப்புகளை குறைக்க முடியும்” என அவர் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்புகள் குறையத் துவங்கியிருப்பது கோவை மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது.