’கோடநாடு கொலை வழக்கு’- வாளையார் மனோஜின் ஜாமின் நிபந்தனைகளில் தளர்வு...!
’’சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் கோடநாடு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தனர்’’
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரும் ஜாமின் பெற்று மாதந்தோறும் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். இவ்வழக்கில் புதிய திருப்பமாக சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் கோடநாடு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் நீலகிரி மாவட்ட நீதிமன்றம் இருவரையும் சிறையில் அடைக்க மறுத்து விட்டது. இதையடுத்து சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரின் ஜாமின் மனுவினை இரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், இருவரின் ஜாமின் மனு இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கேரளாவில் இருந்த சயான் மற்றும் வாளையார் மனோஜ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சயான் மற்றும் வாளையார் மனோஜ் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் கிடைத்தது. நீலகிரி அல்லது கோவையில் உள்ள இருவர் உத்தரவாதம் தர வேண்டும் எனவும், 50 ஆயிரம் ரூபாய் சொத்து ஆவணம் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. சயான் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், வாளையார் மனோஜ்க்கு ஜாமின் உத்தரவாதம் அளிக்க யாரும் முன் வராததால், குன்னூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிபந்தனைகளை தளர்த்த கோரி வாளையார் மனோஜ் தரப்பு வழக்கறிஞர் முனிரத்தினம் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தி நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார். கேரளாவை சேர்ந்த இரண்டு இரத்த சொந்தங்கள் ஜாமின் உத்தரவாதம் தரலாம் எனவும், 50 ஆயிரம் ரூபாய் சொத்து ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் எனவும் நிபந்தனை தளர்த்தப்பட்டது.
கோடநாடு வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் 9 பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த நிலையில் ஜாமின் நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளதால், சிறையில் உள்ள வாளையார் மனோஜ் விரைவில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.