(Source: ECI/ABP News/ABP Majha)
Ram Temple : 'ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு தமிழக அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்' - வானதி சீனிவாசன் கோரிக்கை
Ram Temple : "ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு மற்ற மாநிலங்களில் விடுமுறை அளிப்பதுபோல தமிழ்நாட்டிலும் விடுமுறை அறிவிக்க வேண்டும்"
Ayodhya Ram Temple : கோவை கெம்பட்டி காலனி பகுதியில் சுவர்களில் பாஜக சின்னமான தாமரையை வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது ஐந்து இடத்திலாவது பாஜகவின் சின்னமான தாமரை வரைய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து கட்சி நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் வரைந்து வருகின்றனர் எனவும், கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் என்கிற வகையில் இன்று இந்த பணிகளை துவக்கி வைத்துள்ளேன் என தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்றும் நாளையும் பல்வேறு கோவில்களில் பிரதமர் வழிபாடு செய்கிறார் என தெரிவித்த அவர், ராமருக்கும் தமிழகத்திற்கும் பாரம்பரியம் மிக்க, கலாச்சார ரீதியான இணைப்பு உள்ளது என்றார். இங்கு வழிபாடு செய்து அயோத்திக்கு பிரதமர் செல்வது தமிழகத்திற்கு பெருமை அளிப்பதாகும் எனவும், அரசு நிகழ்ச்சிகளில் பிரதமரும் முதல்வரும் கலந்து கொள்வது இயல்பு தான் அதை கூட்டணி என பார்க்க முடியாது என்றார். மழை வெள்ள பாதிப்புகளுக்கு தேவையான தொகையை உடனடியாக பிரதமர் கொடுத்துள்ளார் எனவும், தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதி, கொடுக்க வேண்டிய அக்கறை இவை இரண்டையும் பிரதமர் கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.
மேலும் ராமர் கோவில் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கமிட்டி தான் உரிய பணிகளை செய்தது எனவும் அனைத்தையும் தேர்தலோடு தொடர்பு படுத்த முடியாது என்றார். நாட்டில் எப்போதும் ஏதாவது தேர்தல் நடந்து கொண்டு தான் இருக்கும் என தெரிவித்தார். மேலும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு மற்ற மாநிலங்களில் விடுமுறை அளிப்பது போல தமிழ்நாட்டிலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பட்டியலினப் பெண் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் கட்சி எம்எல்ஏ என்பதால் விட்டு விடாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.