’விஸ்வகர்மா யோஜனா திட்டம் அரசியலுக்காக குலக்கல்வி என விமர்சிக்கப்படுகிறது’ - வானதி சீனிவாசன்
”பாரம்பரியம் சார்ந்த தொழில்கள் நசிந்து போகாமல் ஊக்கம் அளித்தால் நமது நாட்டினுடைய பொருளாதாரம் வளரும், அவர்களுடைய வாழ்க்கை தரம் உயரும் என்ற காரணத்தினால் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது”
பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் பயனாளிகளை பதிவு செய்யும் நிகழ்ச்சி கோயம்புத்தூர் செட்டிவீதியில் உள்ள விஸ்வகர்மா அமைப்பினர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு விஸ்வகர்மா திட்டத்தின் பயன்களை எடுத்துரைத்தார். தொடர்ந்து இத்திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய வானதி சீனிவாசன், இத்திட்டத்தின் கீழ் கோவை தெற்கு தொகுதியில் அதிக அளவில் உள்ள விஸ்வகர்மா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு அனைவருக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த வானதி சீனிவாசன், ”கோவை தெற்கு தொகுதியில் பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா என்கிற திட்டத்தில் விஸ்வகர்மா தொழில் செய்யக்கூடிய மக்களை இலவசமாக அந்த திட்டத்தில் பதிவு செய்து கொடுப்பதற்கான துவக்க நிகழ்ச்சியில கலந்து கொண்டுள்ளேன். இந்த தொகுதி முழுவதும் எந்தெந்த பகுதிகளில் விஸ்வகர்மா சமுதாய பணியாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் முகாம்கள் நடத்தி அவர்களுக்கு இலவசமாக பதிவு செய்து கொடுக்கின்ற பணிகளை வரக்கூடிய நாட்களில் தொடர்ச்சியாக செய்யவிருக்கிறோம். இந்த திட்டத்தின் வாயிலாக தெற்கு தொகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேருக்கு மேலாக பலன் அடைவார்கள்.
உடுப்பியில் மத்திய அரசின் சார்பில் தங்க நகை செய்பவர்களுக்கான பயிற்சி மையம் உள்ளது. அதை போலவே கோவை தெற்கு தொகுதியில் மத்திய அரசின் சார்பாக பயிற்சி மையத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என வேண்டுதல் வைத்திருக்கிறேன். அந்த பயிற்சி மையத்தை அமைக்க மீண்டும் கோரிக்கை வைத்து, இந்த தொகுதியில் கொண்டு வருவதற்காக முயற்சி செய்யப் போகிறேன். இந்த திட்டம் முழுமையாக சிறு தொழில்கள் இருக்கக்கூடிய அத்தனை மக்களையும் அரவணைக்கின்ற திட்டமாக உள்ளது. ஏனென்றால் இந்த தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்து எந்த அரசாங்கமும் எதுவும் செய்யவில்லை. பாரம்பரியம் சார்ந்த தொழில்கள் நசிந்து போகாமல் ஊக்கம் அளித்தால் நமது நாட்டினுடைய பொருளாதாரம் வளரும், அவர்களுடைய வாழ்க்கை தரம் உயரும் என்ற காரணத்தினால் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அரசியலுக்காக இதை குலக்கல்வி என விமர்சிப்பதை நாங்கள் புறக்கணிக்கிறோம். அது தவறான பார்வையாகும். யார் இந்த தொழில் செய்தாலும் இந்த திட்டத்தின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம்” எனக் கூறினார்.