’முதலமைச்சரால் அமைச்சர்களை கூட கட்டுப்படுத்த முடியவில்லை’ - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
”சட்டம், ஒழுங்கை ஒரு ஐடி விங் கெடுக்கிறது என்று சொன்னால் தன்னுடைய காவல் துறை மீது முதல்வருக்கு நம்பிக்கை இல்லையா? ஆளுங்கட்சி தலைவர்கள் சட்டம் ஒழுங்கு சீர்குலைய காரணமான கருத்துகளை சொல்கிறார்கள்.”
கோவை மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ”பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. மகளிர்களை வாக்களர்களாக பார்க்காமல் சமூகத்தின் ஒரு அங்கமாகவே பாஜக பார்க்கிறது. பாஜகவிலிருந்து ஒருவர் வெளியேறினாலும், இன்று விவதமாக மாறி வருகிறது. கடந்த வாரம் 420 பேர் மாற்று கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் எண்ணிக்கை என்பது மிகவும் முக்கியம் என்பதால், எந்த ஒரு சாதாரண தொண்டனும் பாஜகவிலிருந்து சென்றால் கூட அதை நாங்கள் உன்னிப்பாக கவனிப்போம். யாரும் செல்லகூடாது என்பது எங்களின் விருப்பம்.
ஆனால் சில சமயம் தனிப்பட்ட அரசியல் ஆசைக்காகவும், தனிப்பட்ட கொள்கைகாவும் சிலர் சென்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏன் இவ்வளவு பேர் பங்கேற்கவில்லை என்பதை தமிழக அரசு உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தமிழகத்தில் கல்வி நல்ல நிலையில் இருந்தாலும், அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. கல்வித்துறை அமைச்சருக்கு நான் சொல்வது, உங்களின் நண்பர் அரசியலில் இருக்கலாம். சினிமாவில் நடிக்கலாம். அவரோடு நீங்கள் சேர்ந்து நேரத்தை செலவிட்டாலும், இது போன்ற விஷயங்களில் கல்வித் துறை அமைச்சர் கவனத்தை செலுத்த வேண்டும்.
மக்களை ஏமாற்றுவதில் திமுகவிற்க்கு தலைமுறை வேறுபாடே கிடையாது. நீட் விலக்குகாக போராடுவோம் என்று சொல்லியே தான் இத்தனை குழந்தையின் உயிரை பழிவாங்கினார்களா? தொடர் போராட்டம் தான் எனது ரகசியம் என்று சொல்லி உதயநிதி சொல்வது யார் காதில் பூ சுற்றும் வேலை? சட்டம், ஒழுங்கை ஒரு ஐடி விங் கெடுக்கிறது என்று சொன்னால் தன்னுடைய காவல் துறை மீது முதல்வருக்கு நம்பிக்கை இல்லையா? ஆளுங்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் சட்டம் ஒழுங்கு சீர்குலைய காரணமான கருத்துகளை சொல்கிறார்கள். தனது சொந்த அமைச்சர்களை கூட கட்டுபடுத்த முடியவில்லை என்றால், ஏன் அவர் எதிர்கட்சி மீது பாய வேண்டும்?
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் தாக்குதலுக்கு காரணம் திமுகவின் தலைவர்கள் தான். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென்றால் முதல்வர் தன்னுடைய பேச்சிலே கவனம் செலுத்த வேண்டும். தன்னுடைய அமைச்சர்கள் பேசிய கருத்துகளுக்கு விளைவுகள் எவ்வாறு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முதல்வர் தன்னுடன் இருப்பவர்களிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும். கடந்த சில நாட்களாக அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும், பாஜகவின் சில நிர்வாகிகளுக்கும் கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் ஒரு ஆரோக்கியமான கூட்டணிக்கு சிக்கலை உண்டாக்கும். இது சமந்தமான தகவல்கள் தேசிய தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கிருஷ்ணகிரிக்கு ஜே.பி.நட்டா வரும் போது எங்களையெல்லாம் அழைத்து, இது போன்ற விரும்பதாக செயல்கள் இனி நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று சொல்லி அறிவுறுத்தினார். வரும் காலங்களில் இது போன்று நடக்காது என்பது எங்களின் நம்பிக்கை. ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு. இதில் எந்த மாற்றுகருத்துமில்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை கொண்டு வரும் போது, இந்த சட்டத்தில் உள்ள ஓட்டைகள் என்ன? நாளை நீதிமன்றத்தில் இது செல்லபடியாகுமா? என்ற சில கேள்விகளை தான் கவர்னர் கேட்டிருக்கிறார். இந்த கேள்விகளை நாளை நீதிமன்றத்தில் கேட்டால், அரசு என்ன பதில் சொல்லும்? அரசாங்கம் இதை கெளர்வ பிரச்சனையாக பார்க்காமல் கவர்னர் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்து சட்டத்தைக் பலமாக கொண்டு வர கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.