நீலகிரி : காட்டு யானை தாக்கி மேலும் ஒருவர் உயிரிழப்பு ; பொதுமக்கள் அச்சம்..!
இரண்டு நாட்களில் இரண்டு பேரை காட்டு யானை தாக்கி கொன்றதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காட்டு யானையை உடனடியாக கிராமப்பகுதியில் இருந்து விரட்ட வேண்டுமென வலியுறுத்தினர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரூற்றுபாறை கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனந்த் (46) என்பவர் காட்டு யானை தாக்கி பலியானார். அப்பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வந்த அவர், ஆரூற்றுபாறை பஜாரில் டீக்கடை நடத்திவந்தார். வழக்கம் போல கடை திறக்க வந்த போது, எதிரே வந்த காட்டு யானை தாக்கி கொன்றது. இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து யானையை விரட்டினர். இதனைத் தொடர்ந்து அங்கு குவிந்த கிராம மக்கள் 5 மணிநேரம் உடலை சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து வனத்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அந்த யானையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும் முதுமலையில் இருந்து கும்கி யானைகள் உதவியுடன் அந்த யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனிடையே அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் வழியாக சென்ற காட்டு யானை, அங்குள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் தஞ்சம் அடைந்தது. யானை வழக்கமாக செல்லும் வழியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. பிரகாஷின் இரண்டு பெண் குழந்தைகளான ரஷ்மிதா மற்றும் பிரவீனா தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று இருவரும் பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு எழுத தயாராக இருந்த நிலையில், அவர்களது வீட்டு வழியாக சென்ற காட்டு யானை அவர்களின் வீடு அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் தஞ்சம் அடைந்திருந்தது. தேர்வுக்குச் செல்ல நேரம் ஆன நிலையில் காட்டு யானை எந்நேரமும் வரலாம் என்ற அச்சத்தில் மாணவிகள் இருவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதனால் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
இதனிடையே காட்டு யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற சீனிவாசன் மற்றும் விஜய் என்ற 2 கும்கி யானைகள் அந்த பகுதிக்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு ஓவேலி பேரூராட்சிகுட்பட்ட பாரம் பகுதியில் வசித்து வரும் மும்தாஜ் என்கின்ற மாலுமா (38) என்பவர், அருகில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்று சாம்பார் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிரே வந்த காட்டு யானை அவரது வீட்டுக்கு முன்பாகவே கடுமையாக தாக்கியதில் மும்தாஜ் உயிரிழந்தார்.
இதனை அடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டு யானை விரட்டினர். பின்னர் அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் அங்கு வந்த வனத்துறையினர் வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வனத்துறையினரிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுனர். இரண்டு நாட்களில் இரண்டு பேரை காட்டு யானை தாக்கி கொன்றதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
காட்டு யானையை உடனடியாக கிராமப்பகுதியில் இருந்து விரட்ட வேண்டுமென வலியுறுத்தினர். வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து 5 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து மும்தாஜின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.