மகனுடன் மாஸ் காட்டிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் – கார் ரேஸில் சீறிப்பாய்ந்து சாகசம்...
கார் ரேஸ் டிராக்கில் சாகசம் செய்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ; மகனுடன் பங்கேற்ற வீடியோ வைரல்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கோவையில் சாதனைப் பெண்களை கௌரவிக்கும் வகையில் Gear Up Foundation சார்பில் கார் மற்றும் மோட்டார் ரேஸ் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமான மேடைப் பேச்சுகள், விருது வழங்கல் போன்ற நிகழ்வுகளைத் தாண்டி, சாகச விளையாட்டுகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழாவில், வானதி சீனிவாசன், பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமானவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கார் சாகசத்தில் தனது மகன் ஆதர்ஷுடன் இணைந்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பங்கேற்றார். ரேஸ் டிராக்கில் தேர்ந்த ஓட்டுநர் போல தன்னம்பிக்கையுடன் கார் ஓட்டிய அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
“பெண்கள் எந்தத் துறையிலும் சளைத்தவர்கள் அல்ல; சாகச விளையாட்டுகளிலும் சாதனை படைப்பார்கள்” என்பதை தனது செயலின் மூலம் அவர் நிரூபித்ததாக அங்கு கூடியிருந்தோர் பாராட்டினர். மகளிர் தினத்தை ஒட்டி பெண்களின் வீரத்தையும் வேகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கியர் அப் பவுண்டேஷனின் முயற்சியை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பெண் ரேஸ் வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.























