குடி போதை... 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ - சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழப்பு
ஆட்டோவை ஏழுமலை ஓட்டி வந்த நிலையில் மூலக்காடு எனும் பகுதி அருகில் செங்கல் சூளைக்காக தோண்டப்பட்ட சுமார் 50 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
கோவை - தடாகம் சாலையில் உள்ள சோமையனூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (34). இவரது நண்பர்களான வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (45), கருப்பசாமி (51), அய்யனார் (45), சக்திவேல் (39). இவர்கள் ஐந்து பேரும் தினேஷ்குமார் வீட்டில் நேற்று மதியத்திற்கு மேல் இருந்து மது அருந்தி உள்ளனர். பின்னர் வெளியில் எங்காவது சென்று மது அருந்தலாம் என்று எண்ணி ஏழுமலையின் ஆட்டோவில் வீரபாண்டியை அடுத்த மருதங்கரை என்ற மலைவாழ் கிராமப் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சென்று மது அருந்தி விட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.
அப்போது ஆட்டோவை ஏழுமலை ஓட்டி வந்த நிலையில் மூலக்காடு எனும் பகுதி அருகில் செங்கல் சூளைக்காக தோண்டப்பட்ட சுமார் 50 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுநரான ஏழுமலை மற்றும் கேபிள் ஆபரேட்டரான கருப்புசாமி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தடாகம் காவல் துறையினர் ஊர் மக்கள் உதவியுடன் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தடாகம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீக்கிரையான அரசு பேருந்து
சேலத்திலிருந்து கோவை நோக்கி அரசுப்பேருந்து ஒன்று பயணிகளுடன் நேற்று மதியம் கிளம்பியது. பேருந்தில் 67 பயணிகள் பயணித்தனர். நேற்று மாலை 4 மணியளவில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே எலச்சிபாளையம் அருகே வந்த போது, எஞ்சினின் முன்புறம் புகை வருவதை கண்ட ஓட்டுனர் சிவகுமார் மற்றும் நடத்துனர் ராஜா ஆகியோர் சந்தேகமடைந்து பேருந்தை நெடுஞ்சாலை மேம்பாலத்தின் ஓரத்திலேயே நிறுத்தி பேருந்தை சோதனையிட்டுள்ளனர். மேலும் பயணிகளையும் இறங்க சொல்லியுள்ளனர்.
இதனிடையே தீ மளமளவென பரவி, பேருந்து முழுவதும் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. மேலும், அவ்வழியே சென்ற வாகனங்களும், ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சூலூரிலிருந்து தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர். இருப்பினும் அதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.