Crime : வட மாநில இளைஞரை தாக்கி டி.வி, பணம் பறிப்பு ; காவலர் உள்ளிட்ட இருவர் கைது
வட மாநில இளைஞரை தாக்கி ஐந்து தொலைக்காட்சிகள் மற்றும் 47 ஆயிரம் பணம் ஆகியவற்றை பிடுங்கிச் சென்ற காவலர் முருகன் மற்றும் அவரது நண்பர் பிரதீஷ் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவையில் வட மாநில இளைஞரை தாக்கி ஐந்து தொலைக்காட்சிகள் மற்றும் 47 ஆயிரம் பணம் ஆகியவற்றை பிடுங்கிச் சென்ற காவலர் முருகன் மற்றும் அவரது நண்பர் பிரதீஷ் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வருபவர் முருகன். இவரது நண்பர் பிரதீஸ். ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் தொலைக்காட்சி பெட்டிகளை குறைந்த விலைக்கு வாங்கி இருக்கின்றனர். இந்நிலையில் அந்த தொலைக்காட்சி பெட்டிகள் வாங்கிய சில தினங்களிலேயே பழுதாகி இருக்கிறது. இந்நிலையில் கடந்த 20 ம் தேதி சூலூர் பகுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தசீம் என்பவர் தொலைக்காட்சிகள் குறைந்த விலைக்கு கிடைக்கும் எனக்கூறி விற்பனை செய்து வந்துள்ளார்.
அதைப் பார்த்த சூலூர் காவல் நிலைய காவலர் முருகன் இவர்களும் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என நினைத்து தசிமை பிடித்து விசாரித்துள்ளார். அதில் தசீம் தனது நண்பர்களுடன் சிங்காநல்லூர் வரதராஜபுரம் கம்பன் நகர் பகுதியில் தங்கியிருப்பதும், வட மாநிலத்திலிருந்து அசெம்பிள் டி.விகளை கொண்டு வந்து வீதி வீதியாக சென்று விற்பனை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவலர் முருகன், தனது நண்பர் பிரதீஷ்சுடன் காரில் தசீமை வரதராஜபுரம் கம்பன் நகர் பகுதிக்கு அழைத்து வந்து அவரது அறையில் வைத்து தாக்கியுள்ளார்.
தன்னை ஏமாற்றிய நபர்கள் அங்கு இல்லாத நிலையில் அறையில் இருந்த 5 தொலைக்காட்சிகள், கேஸ் ஸ்டவ் மற்றும் 47 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை காவலர் முருகேசன் தனது நண்பர் பிரதீஷ்சுடன் சேர்ந்து தூக்கிச் சென்றார். இது தொடர்பாக வட மாநில இளைஞர் தசீம், தன்னை தாக்கியதுடன் அறையில் இருந்த தொலைக்காட்சிகள், கேஸ் ஸ்டவ் மற்றும் 47 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற காவலர் முருகன் மற்றும் பிரதீஷ் ஆகியோர் மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் காவல் துறையினர் கொலை மிரட்டல், முறையற்ற தடுப்பு, பணம் பறித்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவலர் முருகன் , அவரது நண்பர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பிரதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்






















