கோவை குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகளுக்கு தடை
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சிறுவாணி அடிவார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களான, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் நெல்லை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த 7 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கொட்டித்தீர்த்த கனமழை
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் பரவலாக லேசான மழை, அவ்வப்போது பெய்து வருகிறது. இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை துவங்கியது முதல், வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று சிங்கோனா, சின்னக்கல்லார், சோலையாறு ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்தது. அதேபோல வால்பாறை பகுதிகளில் கனமழை பெய்தது.
அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 19.8 செ.மீ. மழையும், சிங்கோனா பகுதியில் 14.7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்றும் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். இதேபோல கடந்த 20 ம் தேதியும் கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சிறுவாணி அடிவார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சிறுவாணி அடிவார பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கோவை குற்றாலம் அருவிகளுக்கு செல்ல தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு சீரான பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.