திருப்பூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதியில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழப்பு
ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதியில் கெட்டுப்போன காலை உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதியில் கெட்டுப்போன காலை உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 17 சிறுவர்கள் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் சிறுவர்களுக்கு இன்று காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. உணவருந்திய பின்னர் 14 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனிடையே 3 சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகளின் உடல் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 11 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சிறுவர்கள் மூவரும் 10 வயது முதல் 13 வயதுக்குள்பட்டவர்கள் என்பதும், சிறுவர்கள் கெட்டுப் போன உணவை உட்கொண்டதால் உயிரிழந்ததும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்தனர். அப்போது அவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்