கோவையில் ரயில் மோதி உயிரிழந்த 3 யானைகள்.! ரயிலின் வேகம்தான் காரணமா? விசாரணை தீவிரம்!
போத்தனூர் - பாலக்காடு இரயில் பாதையில் மட்டும் கடந்த 1978ம் ஆண்டு முதல் இதுவரை 28 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளன.
![கோவையில் ரயில் மோதி உயிரிழந்த 3 யானைகள்.! ரயிலின் வேகம்தான் காரணமா? விசாரணை தீவிரம்! Three female elephants, including two baby elephants, were killed when a train collided near Coimbatore கோவையில் ரயில் மோதி உயிரிழந்த 3 யானைகள்.! ரயிலின் வேகம்தான் காரணமா? விசாரணை தீவிரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/27/96a3b5cca52644402625096aca8dfca6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழக கேரள எல்லையான நவக்கரை அருகே ரயில் பாதை ஒன்று உள்ளது. கேரளாவிலிருந்து ரயில்கள் இந்த பாதை வழியாக தமிழகத்திற்கு சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை மங்களூர் - சென்னை இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் இப்பாதையில் வந்து கொண்டிருந்தது. வாளையாறை கடந்து மதுக்கரைக்கு இடையே நவக்கரை அடுத்த மாவுத்தம்பதி கிராமத்தின் மரப்பாலம் தோட்டம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் ரயில் வந்த போது, ரயில் தண்டவாளத்தை 3 காட்டு யானைகள் கடப்பதை கண்டு ரயில் ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் ரயிலை நிறுத்துவதற்கு முன்பாக அதிவேகத்தில் வந்த ரயில், 3 யானைகள் மீதும் மோதியது. இதில் 3 யானைகள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தன. இதில் ஒரு யானை தண்டவாளத்திலேயே விழுந்துவிட, 2 யானைகள் அருகிலிருந்த பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டன. இந்த விபத்தில் 3 யானைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து ரயில் ஓட்டுனர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையின் உடல்களை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பாதையில் தற்காலிகமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து, இரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.
இது தகவலறிந்து அங்கு திரண்ட அப்பகுதி மக்கள், யானைகளின் உடல்களுக்கு கற்பூரம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து யானைகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதே பாதையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 3 யானைகள் ஒரே நேரத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வனப்பகுதி வழியாக செல்லும் அதிவேக ரயில்களில் அடிபட்டு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 186 யானைகள் உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாதையில் மட்டும் கடந்த 1978ம் ஆண்டு முதல் இதுவரை 28 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளன.
தமிழக கேரள எல்லையின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பாதையை தினந்தோறும் ஏராளமான வனவிலங்குகள் கடந்து சென்று வருகின்றன. குறிப்பாக யானைகள் இந்தப்பகுதியை அதிகளவில் கடப்பதால், ரயில்களுக்கு வேகக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. பலமுறை இந்த பாதையில் யானைகள் அடிபட்டு இறப்பது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், மீண்டும் அதிவேகத்தில் ரயில்களை இயக்க அனுமதித்த ரயில்வே துறையை பொதுமக்கள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் யானைகள் கடப்பது வாடிக்கையாக இருப்பதால், இப்பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையையும் வனத்துறையினர் அலட்சியப்படுத்தியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்து 3 பேருயிர்கள் இன்னுயிரை இழந்துள்ளதாகவும் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது குறித்து இருமாநில அரசுகளும், ரயில்வேதுறையும் உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பேசிய மண்டல வன பாதுகாவலர் ராம சுப்பிரமணியம், “மூன்று யானைகள் மீது இரயில் மோதிய சம்பவத்தில் ஓட்டுனர் மற்றும் உதவியளரிடம் விசாரணை தொடங்கியுள்ளது. கட்டுபாடுகளை மீறி இரயில் இயக்கப்பட்டு இருந்தால் வன உயிர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இனி இதுபோன்று விபத்து நடக்காமல் இருக்க வாட்சிங் டவர் மற்றும் சிசிடிவி கேமிராக்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதை நாங்கள் மட்டும் செய்துவிட முடியாது. இரயில்வே துறையினருடன் இணைந்து தான் செய்ய முடியும். விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். யானைகள் உயிரிழப்பு பட்டா நிலத்தில் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தார். இரயில் வேகமாக இயக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்” என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)